கோப் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதத்திற்கு அழைப்பு

கோப் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதத்திற்கு அழைப்பு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் மீது இரு நாள் விவாதம் நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு முன்மொழிய பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கூட்டத்தில் ஏகமனதான முடிவு எட்டப்பட்டது.

2021 ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட இரண்டாவது அறிக்கையான மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தினூடாக நிறுவப்பட்ட இலங்கை தகவல்தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) குறித்த அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் சிறப்பு அறிக்கையாகும்.

இவ்வாறு  இரண்டாவது சிறப்பு அறிக்கை மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்படுவதன் மூலமாக  இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) தற்போதைய நிலைமை மற்றும் அந்நிறுவனம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகபாராளுமன்றத்திலும் நாட்டிற்குள்ளும் ஒரு பரந்த கருத்தாடலை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் விசாரணை அறிக்கையின்  அடிப்படையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை அரசு சாராநிறுவனமாக அங்கீகரிக்கவும், அதற்கேற்ப குறித்த நிறுவனம் எந்த அமைச்சின் எல்லைப்பரப்பின் கீழும் வராது என 24.05.2017 அன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக விமர்சன ரீதியாக ஆராயவும் குறித்த நிறுவனம் தொடர்பாக எடுக்கப்பட்ட ஏனைய  அமைச்சரவை தீர்மானங்களின் உள்ளடக்கங்களை பரிசீலிக்கவும் SLIIT நிறுவனத்தை ஒரு அமைச்சின்கீழ் கொண்டுவருவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஹாபொல நிதியத்தின் திட்டமாக அந்நிதியத்தின் 500 மில்லியன் ரூபாவை மூலதனமாகக் கொண்டு மாலபேயில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனம் இதுவரை நிதியத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆரம்பிக்கப்பட்டதன் பிரதான நோக்கத்தை மீறி வியாபார நிறுவனமாக அதிக இலாபத்தைப் பெறும் நிறுவனமாக மாற்ற பல்வேறு தரப்பினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

இந்த நிலைமையை மாற்றி மீண்டும் அதனை மஹாபொல நிதியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும், சாதாரண கட்டணத்தின் கீழ் உயர் கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய அதிகாரசபையின் அதிகாரம் இன்றி 2015.05.12 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக SLIIT நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்துக்குக் காணப்பட்ட உரிமை மற்றும் அதன் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்த அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்வைத்துள்ள இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SLIIT நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் சிக்கலான நடைமுறை திட்டமிடப்பட்ட மோசடியாகத் தோன்றுகின்றது என்றும், அரசாங்க நிதி முதலீட்டில் ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு நிறுவனமும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பிலும் குழு உறுப்பினர்களால் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் நாளக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினரக்ளான ஜகத் புஷ்பகுமார, இரான் விக்ரமரத்ன, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, நளின் பண்டார மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோரும், கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்னவும் கலந்துகொண்டனர்.