மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை கொட்டகலையில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள தீர்மானம்

 மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி   கிரியை கொட்டகலையில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள தீர்மானம்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியையினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (27) முற்பகல் 11 மணி மரை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் அன்னாரின் பூதவுடல் இன்று கொழும்பிலுள்ள அன்னாரது இராஜகிரிய இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை (28) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

பின்னர் அங்கிருந்து றம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று (26) காலமானார்.

இதேவேளைஇ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்திற்கு பேரிழப்பு என ஜனாதிபதி, பிரதமர் என பல அரசியல் வாதிகள் அனுதாபம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதிகளுள் ஒருவரான, ஆறுமுகன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்தார். இவர் மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்திற்காக அயராது உழைத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற ஆறுமுகன் தொண்டமான், 1990ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார். 1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும் 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் மலையக மக்களின் நலனுக்காக ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்தும் அயராது உழைத்து வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.