'வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சொந்த மாவட்டங்களில் வாக்களிக்க இடமளியுங்கள்'

'வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை  சொந்த மாவட்டங்களில் வாக்களிக்க இடமளியுங்கள்'

வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட உள்ளக இடம்பெயர்ந்த வாக்காளர்களை தங்களது சொந்த மாவட்டங்களில் வாக்களிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வியாழனன்று (07) வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் தேருநர்களைப் பதிவு  செய்தல் (திருத்த) சட்ட மூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்த) சட்ட மூலம் மற்றும் ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்தாதாவது,

"அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை வகிக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் இரு விடுத்தங்கள் தோன்றி பல புதிய காரணங்களை முன் வைத்தனர்.

 பிரஸ்தாப தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த முறை வலியுறுத்திய விடயம் தான், பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை மிக அவசரமாக நடத்துவதற்கான அவசிய நடவடிக்கைகளை எடுப்பதுபற்றியதாகும்.  

இப்பொழுது தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தடைப்பட்டு போயுள்ள சூழ்நிலையில், மூன்றாண்டுகளாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றி , பலமிழந்து ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்துவரும் மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டியதன் தேவையையிட்டே தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளது.

 முன்னைய தேர்தல் முறைமையை மீண்டும் அதே விதத்தில் கையாள்வதன் மூலம் மாகாணசபை தேர்தலைஅவசரமாக நடத்தலாம் என்றதவாறு அதில் யோசனை முன்வைக்கப்பட்டது.

அது பற்றி சட்டமா அதிபர் திணைக்கள அபிப்ராயமும் தெரிவிக்கப்பட்டது. அதிலுள்ள ஒரு சில சிக்கல்கள் குறித்த விளக்கமும் பெறப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது தொடர்பில் ஏற்கனவே ஓர் இலகுவான சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார். அதை அரசாங்கம் பொறுப்பெடுத்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்து ,அங்கீகாரம்  பெற்றுஅதை அரசாங்கத்தினூடாக முன்வைத்து நிறைவேற்றி மாகாண சபை தேர்தலை எவ்விதமான தாமதமுமின்றி நடத்தலாம்.

(இந்தக்  கட்டத்ததில் லக்ஷ்மன் கி ரியெல்ல குறுக்கிட்டு,  எதிர் கட்சியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறினார்).

இன்றைய "வீரகேசரி பத்திரிகை  மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்தி 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறாகஇந்திய வெளிவிவகார அமைச்சர் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். 13ஆவது திருத்தத்தை பலப்படுத்தமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுவது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதாகும். இந்த அக்கறை பற்றி அமைச்சர் குணவர்தன நன்கறிவார்.

பிரஸ்தாப தேர்தல் பல வருடங்களாக பிற்போடப்பட்டு வருகின்றது. முன்னர் குறிப்பிட்டதை போன்று ஒரு இலகுவான திருத்தத்தை செய்வதன் மூலம் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் நடாத்த   வேண்டியிருக்கிறது.

 ஆகையால், உரிய காலம் மிகவும் பிந்தி விட்டதால் மாகாண சபை தேர்தல் நடத்துவதை மேலும் தாமதமாக்கக் கூடாது என மீண்டும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

இப்பொழுது எதிர் கட்சியில் இருக்கும் நாங்கள் முன்னைய ஆட்சியில் தேர்தல் முறைமை குழப்பியடித்ததற்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கிறது. அந்தப் போக்கை ஆரம்பத்திலிருந்து நான் எதிர்த்து வந்துளேன் என்பது அமைச்சர் தினேஷ் குணவர்தன போன்றவர்களுக்குத் தெரியும்.

பின்னர் துர்திஷ்டவசமாக மசோதா சட்டமாகிய எல்லை மீள் நிர்ணயம் சர்ச்சைக்குரியதாகி அதனைக்கொண்டு வந்த அமைச்சரஅதற்கு எதிராக வாக்களிக்குமளவுக்கு இந்த சபையில் கேலிக்குரியதாகி விட்டது.

இந்த நாட்டில் உள்ளக இடம்பெயர்ந்த மக்களை பற்றி பேச வேண்டும். எதிர்வரும் அக்டோபர் 30ஆம் திகதி ஏறத்தாழ ஓரிலட்சம் முஸ்லிம்கள் வட மாகாதிலிருந்து விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இவ்வாறு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் விளைவாக அவர்கள் நாட்டின் வேறு மாவட்டங்களுக்கு சென்று குடியேறி தங்களது சொந்த வீடுகளுக்கு மீளச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் சமாதானம் நிலவும் சூழலிலும் பல்வேறு காரணங்களினால் அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாதுள்ளனர்.

அவர்களில் அநேகர் புத்தளம் மாவட்டத்திலும் ஏனையோர் வேறு மாவட்டங்களிலும் வசித்து வருகின்றனர். உதாரணத்திற்கு அவர்களின் பிள்ளைகள் தற்பொழுது வசித்து வரும் இடங்களிலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர். அந்த மக்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்று தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

தங்களது பூர்வீக மாவட்டங்களில் வாக்காளிப்பதற்கு விருப்பமுடையவர்களாக அவர்கள் இருக்கின்றனர். வன்னி, யாழ்ப்பாணம் உட்பட வடக்கிலே வாக்காளர்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களிடம் வாக்களிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதரங்களை காட்டுமாறு நிர்பந்திப்பது நியாயமற்றது.

இது கோமாற்று அட்டவணையை தயாரிப்பது போன்று விடுதலை புலிகளால் முன்னர் இருந்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு பலவந்தப்படுத்தப்பட்ட உள்ளக இடம் பெயர்ந்ததோரையும் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தாம் வசித்த இடங்களில் காணிகள் உள்ளது. அங்கு பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு வசிப்பதற்கான  அத்தாட்சியை நிரூபிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அது நிவர்த்திக்கப்பட வேண்டும்" என்றார்.