இஸ்லாமிய ஆன்மீக தலைவர்களின் அறிமுக நிகழ்ச்சி

இஸ்லாமிய ஆன்மீக தலைவர்களின் அறிமுக நிகழ்ச்சி

ஏ.எஸ்.எம்.ஜாவித்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது முஸ்லிம்களின் கலை, இலக்கிய மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறான தி;ட்டங்களினை உருவாக்கி அமுல்படுத்தி வருகின்றதாக என   முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

"இலங்கையில் ஆன்மீக ரீதியான தரீக்கா இயக்கங்களே ஆரம்ப காலங்களில் இருந்து வந்ததுள்ளது. அந்த காலங்களில் சூபித்துவ இமாம்களின் சிந்தனைகளும் படிப்பினைகளும் அதிகமாக பேசப்பட்டன. பின்னர் நவீன இயக்கங்களின் வருகையினால் ஆன்மீக ரீதியான இச்சிந்தனைகள் பேசப்படாமல் விடுபட்டுள்ளன.

தற்போதையை தலைமுறையினர் இவ் இமாம்களையும் இவர்களின் சிந்தனைகளையும் தெரியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களின் புத்தகங்களும் எம்மத்தியில் தற்போது காணப்படுவதில்லை. ஆரம்ப காலங்களில் அதிகமான மொழிபெயர்ப்புகளை கொண்ட நல்ல பல சிந்தனைகளை கொண்ட இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் “மகனே” என்ற புத்தகத்தினை கொள்வனவு செய்வதற்காக நாம் தேடிய போது எந்த நூல் விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு காணப்படவில்லை.

ஜாமியா நளீமிய்யா நூலகத்தில் ஓரு பிரதி மட்டுமே காணப்பட்டது. இவ்வாறு செல்லுமிடத்து இஸ்லாமிய அறிவுப்பாரம்பரியத்தனை ஒட்டிய இலக்கியங்கள் இல்லாது போய்விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திணைக்களம் சூபித்துவ சிந்தனை சார்ந்த சில புத்தகங்களை இவ்வருடம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முதலாவது நூலாக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் “மகனே” என்ற புத்தகத்தினை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம், இந்தியாவில் மொழிபெயர்க்கப்பட்ட நல்ல மொழிபெயர்ப்புகள் காணப்பட்டால் திணைக்களத்துக்கு வழங்கிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைக்கு பொறுத்தமான நடுநிலையான நற்சிந்தனை புத்தகங்களை வெளியிடுவதுடன் ஆன்மீக தலைவர்கள் / இமாம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம் சமூகத் தலைவர்களை  அறிமுகம் செய்தல் எனும் தலைப்பின் கீழ் பேச்சாளர்களை கொண்டு தொடர் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அப்துல் காதர் ஜீலானி,  இமாம் கஸ்ஸாலி, இமாம் ஹஸனுல் பஸரி, இமாம் உவைஸுல் கர்னி, இமாம் ஜுனைதுல் பக்தாதி, இமாம் ஷா வலியுல்லாஹ், இமாம் அஹ்மத் ஸிர்ஹிந்தி மற்றும் இமாம் மௌலான ரூமி போண்ற ஆன்மீக தலைவர்களினதும் அறிஞர் சித்தி லெப்பை முதல் டாக்டர் ஷுக்ரி என்ற தலைப்பில் அறிஞர் சித்தி லெப்பை, அறிஞர் ரீ.பீ ஜெயா, அறிஞர் எம்.ஏ அஸீஸ், அறிஞர் ஷாபி மரிக்கார் மற்றும் டாக்டர் ஷுக்ரி போன்ற பல்வேறு சமூகத் தலைவர்கள் மற்றும் புத்திஜுவிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களது வரலாறும் சிந்தனைகளும் பேசப்படும்.

அதற்கிணங்க முதலாவது நிகழ்ச்சியாக அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களை அறிமுகம் செய்யும் விதமாக அவர்களின் வரலாறு மற்றும் சிந்தனைகள் உள்ளடங்களான வெபினார் நிகழ்ச்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16.02.2021ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீப் மௌலவி எம்.என்.எம். இஜ்லான் காசிமினால் நிகழ்த்தப்படும். இரண்டாவது நிகழ்ச்சி அறிஞர் சித்திலெப்பை அவர்களை அறிமுகம் செய்யும் விதமாக அவர்களின் வரலாறு மற்றும் சிந்தனைகள் உள்ளடங்களான வெபினார் நிகழ்ச்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16.03;.2021ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு முன்னாள் புனர்வாழ்வு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தத்துவமுதுமானி ஏ.எம்.நஹியாவினால் நிகழ்த்தப்படும்.

மேற்படி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெறும். மேற்படி சொற்பொழிவு திணைக்கள யூடியூப் மற்றும் முகநூல் ஊடாக நேரலையாக பார்வையிடலாம்" என்றார்.