ஒரு புதிய உலக ஒழுங்கும் இந்தியாவும்

ஒரு புதிய உலக ஒழுங்கும் இந்தியாவும்

 ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா
இந்திய வெளியுறவுச் செயலாளர்


கொவிட்-19 வைரஸ் தொற்றானது மெதுமெதுவாக தணிவடைந்துவரும் நிலையில், பெருநோய்க்கு பின்னரான யதார்த்தங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. தோற்றம்பெறும் உலக ஒழுங்கொன்றிற்கான அடிப்படையினை உருவாக்கும் புரிதல்கள் மற்றும் ஏற்பாடுகள் ஆகியவற்றின் தொகுதி ஒன்றினை அடியொற்றியவையாக அவை காணப்படுகின்றன.

அனுபவரீதியாக நோக்குவதாக இருந்தால், வீழ்ச்சிகளை தொடர்ந்து மீட்சியினை காணமுடியும். இந்நிலையில் இந்திய பொருளாதாரமானது, பொருளாதார பெறுபேறுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுடன் மீண்டும் எழுச்சிபெற ஆரம்பித்துள்ளது.

முன்னொருபோதும் இல்லாத வாய்ப்புடனான ஒரு தடுப்பூசி நிகழ்ச்சி திட்டமும் பாரிய சவால்களும் காரணமாக சுகாதார பாதுகாப்பு மேம்பட்டிருக்கும் அதேவேளை பாதிப்பினையும் வெகுவாக குறைத்துள்ளது. இந்த நிலை காரணமாக இயல்பு நிலை மீளத்திரும்புவதற்கும் இன்னும் பல மாற்றங்களுக்கும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

எனவே இது வாய்ப்புக்களுக்கான ஒரு சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தில் நாளைய சிறந்த எதிர்காலத்திற்கான உறுதிமொழிகளின் பிரதிபலிப்பாகவே இந்தியா மேற்கொள்ளும் தெரிவுகள்  அமைகின்றன.

இந்த பெருநோயானது  ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலல்லாது அதிக அளவில் இணைக்கப்பட்ட உலகின் தேவையை எடுத்துரைக்கின்றது. பொதுவான பிரச்சனைகளுக்கு பொதுவான தீர்வுகளை கொண்டிருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற ஜி7, ஜி20, கோப்26, முதலாவது குவாட் மாநாடு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பிரிக்ஸ், இந்தியா தலைமைத்துவம் வகிக்கும் ஐ.நா பாதுகாப்பு பேரவை மற்றும் அரச தலைவர்களின் ஷங்காய் ஒத்துழைப்பு அமையத்தின் பேரவை போன்ற பல மாநாடுகளில் கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பெருநோய்க்கு பின்னரான உலகின் சவால்களுடன் தொடர்புடைய புதிய உலக ஒழுங்கு ஒன்றிற்கான இலக்கினை மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

அதேபோல அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்துக்கான இந்த இலக்குடனும் இந்திய முன்னுரிமைகளுடனும் இணைந்து செல்லும் ஒரு தொகுதி உத்திகள் மற்றும் இலக்குகளையும் பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் தளங்களில் அவர் சமர்ப்பித்துள்ளார்.  

தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் சிறந்த முறையில் வழங்குவதற்காக இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாரிய சவால்கள் நிறைந்த விடயமாக காலநிலை மாற்றம் உள்ளது. நமது அபிவிருத்தி தேவைகளுக்கு மத்தியிலும் காலநிலை மாற்றம் குறித்த செயற்பாடுகளில் நாம் மிகவும் வலுவான அர்ப்பணிப்பினை வழங்கியுள்ளோம்.

காபன் வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 45 வீதத்திற்குள்ளும் 2070இல் நிகர பூச்சியமாகவும் குறைத்தல், கணிக்கப்பட்ட காபன் வெளியேற்றத்தை ஒரு பில்லியன் தொன்களாலும் குறைக்கும் அதேநேரம்   2030க்குள் ஒட்டுமொத்த சக்தி தேவையில் 50 வீதத்தினை புதுப்பிக்கத்தக்க சக்திகள் ஊடாக வழங்குதல் மற்றும் படிம எரிபொருளை அடிப்படையாகக்கொள்ளாத  சக்தி துறையினை 500 ஜிகாவாட்டாக அதிகரித்தல் போன்ற உயர் இலக்குகளை நோக்கி பயணிக்கும் சுவட்டில் இந்தியாவை உட்புகுத்தவுள்ள “பஞ்சாமிர்தம்” என்ற கொள்கை ஊடான இந்தியாவின் காலநிலை இலக்குகள் தொடர்பாக அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற கோப்26 மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த பிரதமர் அவர்கள் விரிவாக கூறியிருந்தார்.

அபிவிருத்தி அடைந்துவரும் உலகின் கவலைகள் தொடர்பில் தெரிவித்திருந்த பிரதமர் அவர்கள், குறைந்த செலவிலான தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த திட்டங்களுக்கான நிதி பரிமாற்றம் ஆகியவற்றின் மீதான வளர்முக நாடுகளின் இலக்குகளை மேம்படுத்தவேண்டுமென அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் அழைப்பு விடுத்திருந்தார்.

உலகளாவியரீதியில்  முன்னெடுக்கப்படும் காலநிலை மாற்ற இசைவாக்க மற்றும் தணிப்பு செயற்பாடுகளில் இந்தியாவால் நிறுவப்பட்ட இரண்டு சர்வதேச அமைப்புகளான, சர்வதேச சூரியக்கல கூட்டணி மற்றும் பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி ஆகியவை மிகமுக்கியமான வகிபாகத்தை வழங்குவதற்கு ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான அமைப்புகளின் கீழ் அபிவிருத்தி அடைந்துவரும் சிறு தீவு நாடுகளில் காலநிலை மற்றும் பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான “நெகிழ்வுப்போக்கான தீவு நாடுகளின் கட்டமைப்பு” மற்றும் உலகளவிலான வலையமைப்பினைக்கொண்டிருக்கும் சூரியக்கல மின்சக்தி கட்டமைப்புக்கான  ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ என்ற திட்டத்தினை கோப்26 மாநாட்டில் பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தேசிய ஐதரசன் திட்டத்தின்கீழ் பசுமையான ஐதரசன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாறுவதையும் இந்தியா எதிர்பார்க்கின்றது.

ரோமில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான நிலையான வாழ்க்கை முறையினை ஊக்குவிப்பதற்கான பிரதமரின் அழைப்பானது சிறந்த வரவேற்பினைப் பெற்றிருந்தது. அத்துடன் LIFE அல்லது Lifestyle for Environment போன்ற ஒற்றை வார்த்தை இயக்கத்தையும் அவர் முன்மொழிந்திருந்தார். உலகளாவிய அடிப்படையில் இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறைக்கான உதாரணங்களை தளுவிக்கொள்ளுதல் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் மிக முக்கியமான பரிமாணமாகும்.

இந்தப் பெருநோயானது விநியோக மார்க்கங்களை மிகவும் ஆபத்தற்ற வகையில் மேற்கொள்வதற்கான தேவை மற்றும் அவற்றின் நெகிழ்ச்சித்தன்மை ஆகியவற்றின் தேவையினை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விநியோக மார்க்கங்களை மேம்படுத்துவதற்கான மூன்று வழிமுறைகளான நம்பிக்கையான மூலங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர கட்டமைப்பு ஆகியவை தொடர்பாகவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவினை மிகவும் நம்பகரமான ஒரு விநியோக மையமாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் மற்றும் நெகழ்வுப் போக்கு ஆகியவற்றினை ஆத்மநிர்பார் பாரத் அபியான் முன்னுரிமை படுத்துகின்றது. நிதி மற்றும் நாணய ரீதியான ஆதரவு, திரவ பணத்தினை உட்செலுத்துதல், தொழில் துறைக்கான நிதி ஆதரவு, வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கான இலகுவான அணுகுமுறைகள், மற்றும் கட்டமைப்பு ரீதியான முக்கிய மாற்றங்கள் ஆகியவற்றின் ஊடாக வல்லமையை மேம்படுத்துவதற்கான பாரிய கொள்கை கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இது அமைகின்றது.

முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி தொடர்பு ஊக்குவிப்பு திட்டம்  முதலீட்டினை கவர்ந்திழுக்கும் அதேசமயம் தேசிய அளவிலான உற்பத்திகளையும் மேம்படுத்துகின்றது. அத்துடன் இதன் காரணமாக இந்திய வர்த்தகங்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களும் உருவாக்கப்படுகின்றன.

முன்னர் வரையறுக்கப்பட்டிருந்த சில துறைகளான விண்வெளி, பாதுகாப்பு, அணுசக்தி ஆகிய துறைகள் தற்பொழுது சிறந்த தனியார் பங்குடமைக்காகவும் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

 இருபத்தியோராம் நூற்றாண்டின் தொழிற்படை ஒன்றினை கற்பிப்பதற்காகவும் இந்தியாவை உலகளாவிய கல்வி மற்றும் திறன் மையமாக மாற்றுவதற்கும் ஒரு கட்டமைப்பானது தேசிய கல்விக்கொள்கை ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்தியா தனது உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் நோக்கத்துடன் பாரிய அளவில் பொதுவான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமரின் “கதி சக்தி (Gati Shakti)” என்ற பன்முக மாதிரி தொடர்புக்கான தேசிய திட்டமான இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தடைகளுமின்றி இணைக்கப்பட்ட இந்தியாவினை உருவாக்குவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலமாக தொடர்புகளுக்கான பகிரங்க அணுகுமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அதேநேரம் நிறைவேற்று மற்றும் கொள்கை அமுலாக்கல் நிறுவனங்களை பொதுவான ஒரு தளத்திற்கு கொண்டுவருகின்றது.

டிஜிட்டல் தொடர்பாடல், நிதி சேர்ப்பு மற்றும் நோய்த்தடுப்பு ஆகியவற்றின் மீதான நடவடிக்கைகள் மூலமாக ஸ்திரமான அபிவிருத்தி இலக்குகள் மீதான கவனத்துடன் இவ்வாறான உட்கட்டமைப்பு ரீதியான மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படும்.

JAM என அழைக்கப்படும், உலகின் மிகப்பெரிய நிதிச்சேர்க்கை திட்டமான ஜன் தன் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் திட்டமான ஆதார் மற்றும் உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி வலையமைப்புத் திட்டம்; காரணமாக நேரடியாக பலன்கள் கிடைக்கக்கூடியவாறான பரிமாற்றத்தை செயல்படுத்தியுள்ளது.

இது இப்போது ஒரு நிதித்தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜல் ஜீவன் மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை முறையே அனைத்து இந்தியர்களுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கையை மாற்றுகின்றன.

ஸ்திரமான அபிவிருத்தி இலக்குகளின் மூன்றாம் தொகுதி அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான இலக்கை நோக்கி நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. G20 உச்சி மாநாட்டில், பிரதமர் உலகிற்கான "ஒரே பூமி - ஒரே ஆரோக்கியம்" என்ற முழுமையான நோக்கினை முன்வைத்தார்.

தொற்றுநோய் காரணமாக சர்வதேச முறைமைகள் டிஜிட்டல் வெளிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அதாவது வெளிப்படைத்தன்மையுடனும் சமத்துவமாகவும் வினைத்திறன்மிக்க வகையிலும் இலகுவாகக்கையாளக்கூடிய வகையிலும் உலகின் மிகப்பாரிய  தடுப்பூசி முகாமைத்துவத்தை நிர்வகித்த “Co-Win” தளம், டிஜிட்டல் இந்தியா திட்டம் டிஜிட்டல் முறையிலான கட்டண தீர்வுகள் அல்லது 24*7 BPO மற்றும் ITES தொழில்துறை ஆகிய அனைத்தையும் உள்வாங்கி இந்தியா தொடர்ந்தும் டிஜிட்டல் முறைமைக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.

ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர், அபிவிருத்தி சார்ந்த பல பிரச்சினைகளுக்கு இந்தியா, தரமான தீர்வுகளை சான்றளித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இது அபிவிருத்தியை நிரூபிக்கும் களம். இது தெற்கு - தெற்கு அபிவிருத்தி ஒத்துழைப்பின் பரந்த அனுபவத்தையும் கொண்டுள்ளது.

அத்துடன் ஏனைய வளர்முக நாடுகளுக்கு பல வழிகாட்டல்களை வழங்க முடியும். முன்னதாக, ஜி7  மாநாட்டில், இந்தியாவின் திறந்த  டிஜிட்டல் மூலங்கள் அடிப்படையான தீர்வுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.

தொற்றுநோயின் கடினமான நாட்களில் கூட, சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதிதான்  தாமும் என்பதை இந்தியா மறந்துவிடவில்லை. 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது. அதற்கு பதிலாக தன்னுடைய "இரண்டாம் அலையின்" போது அனைவரின் ஆதரவையும் இந்தியா பெற்றது.

சொந்த நாட்டிலேயே தடுப்பூசி பயணத்தை வெற்றிகரமாக நடத்தும் அதே வேளையில், இந்தியாவும் இப்போது அதன் அயல் மற்றும் நட்பு நாடுகளுக்கான தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது.

இவை அனைத்தின் மூலமாகவும், ஏனைய பல நடவடிக்கைகள்  மூலமாகவும், நாளைய சவால்களைச் சமாளிக்கக்கூடிய ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதில் இந்தியா ஒரு முக்கியமானதும் ஆக்கபூர்வமானதுமான பங்காளியாக செயல்படுகிறது. பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட பார்வையைக்கொண்ட ஓர் உலக ஒழுங்கு மனிதர்களையும் அவர்களின் நல்வாழ்வையும் இறுதி இலக்காகக்கொண்டுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பே இதுவாகும். இங்கு கூறப்பட்டவை அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும்.