WHOஇன் பெயரில் போலிச் செய்தி பரப்பல்

WHOஇன் பெயரில் போலிச் செய்தி பரப்பல்

WHOஎன சுருக்கமாக அழைக்கப்படும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெயரில் கடந்த சில நாட்களாக வட்ஸ்அப்பில் போலிச் செய்தியொன்று பரப்பப்பட்டு வருகின்றது.

அதாவது, “7 biggest brain damaging habits” எனும் தலைப்பிலான இந்த flyer இல் உலக சுகாதார ஸ்தாபனத்தினை மேற்கோள்காட்டி பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன:

1.    Missing breakfast
2.    Sleeping late
3.    High sugar consumption
4.    More sleeping specially at morning
5.    Eating meal while watching TV or computer
6.    Wearing Cap/scarf or socks while sleeping
7.    Habit of blocking/Stoping Urine

எனினும் இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த flyer இன் உண்மைத் தன்மையினை அறிவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகத்தினை விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் தொடர்புகொண்டு வினவிய போது, "இந்த flyer போலியானது" எனத் தெரிவித்தனர்.

அது மாத்திரமல்லாமல் இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒருபோது எந்தவித கருத்து வெளியிடவில்லை எனவும் கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளரொருவர் கூறினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் அறிக்கைகள் அதன் இலங்கை அலுவலகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பதிவேற்றப்படுகின்றது. இதனால் குறித்த தகவல்கள் மாத்திரமே நம்பகரமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, “7 biggest brain damaging habits” எனும் தகவல் எப்படி உருவானது என்பது தொடர்பில் விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் ஆராய்ந்த போது பின்வரும் தகவல்கள் வெளியாகியன.

பாகிஸ்தானினை தளமாகக் கொண்டு செயற்படும் டெய்லி டைம்ஸ் எனும் இணையத்தளத்தில் அர்சியா சஹீட் எனும் ஊடகவியலாளர் "8 biggest brain damaging habits" எனும் தலைப்பில் கட்டுரையொன்றினை 2018ஆம் ஆண்டு ஜுலை 23ஆம் திகதி எழுதியிருந்தார்.

சுகாதார துறையுடன் தொடர்புடைய எந்தவித நிறுவனங்களையோ அல்லது தனிநபர்களையோ மேற்கொள்காட்டி எழுதப்படாத கட்டுரையில் "8 biggest brain damaging habits" ஆக பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன:

1.    Missing breakfast
2.    Sleeping late
3.    High sugar consumption
4.    More sleeping especially in morning
5.    Eating meal while watching TV or computer
6.    Smoking
7.    Covering Your Head While Sleeping
8.    Stopping urine

எனினும், இந்த கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருந்த  Smoking எனும் விடயம் மாத்திரம் நீக்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்பட்ட flyerயொன்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி பேஸ்புகில் பகிரப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள Herbicure Clinic & Hijama Centre எனும் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்திலேயே இது பதிவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த flyer பல்வேறு வகையிலான சமூக ஊடங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி பங்களாதேஷின் தலைநகரான டாக்காவினை தளமாக் கொண்டு வெளிவரும் டெய்லி சன் தினசரி பத்திரிகையின் இணையத்தளத்தில் "7 biggest brain damaging habits must stop" எனும் தலைப்பில் கட்டுரையொன்று பதிவேற்றப்பட்டிருந்தது.

இந்த கட்டுரைக்கான மூலங்களாக உலக சுகாதார ஸ்தாபனம் அல்லது சுகாதார துறையுடன் இணையத்தளங்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. எவ்வாறாயினும் குறித்த கட்டுரையில் Herbicure Clinic & Hijama Centre எனும் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த flyer உடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலட்சினை பொறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட flyer உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியின்றி போலியாக தயாரிக்கப்பட்ட இந்த flyer, தற்போது இலங்கையிலுள்ள பல வட்ஸ்அப் குழுங்களில் அதிகமாக பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த flyer இல் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சுகாதார துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருப்பினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்  இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த தகவலினை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவலாக வெளியிடுவது தவறாகும்.

* இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்ப்போம்.