உயர் ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் தமிழக மற்றும் புதுச்சேரி விஜயம்

உயர் ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் தமிழக மற்றும் புதுச்சேரி விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் உயர் ஸ்தானிகராலய உயரதிகாரிகள் இருவர் சகிதம் கடந்த நவம்பர் 21 முதல் 24 வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியினை உயர் ஸ்தானிகர் மரியாதையின் நிமித்தம் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.

இந்திய -  இலங்கை மக்களிடையிலான உறவுகள் தொடர்பான முக்கிய விடயங்களை தமிழக முதலமைச்சருக்கும் தமிழகத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுக்கும் உயர் ஸ்தானிகர் எடுத்துக் கூறினார்.

தமிழகத்தின் மீன்பிடி, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரையும் உயர் ஸ்தானிகர்   சென்னையில் சந்தித்திருந்தார்.

இராமேஸ்வரம் கரையோர நகரப்பகுதிகளுக்கு சென்றிருந்த உயர் ஸ்தானிகர், இந்திய மீனவர்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்து உள்ளூர் மீனவ சமூகங்களுடன் கலந்துரையாடினார்.

அம்மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிக்காக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து தமிழக அதிகாரிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்திய - இலங்கை மக்களிடையிலான உறவுகளுக்கு வழிகோலிய தனுஷ்கோடி பழைய துறைமுகத்துக்கும் உயர் ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருச்சிராப்பள்ளியிலுள்ள இலங்கை புனர்வாழ்வு முகாமுக்கு சென்ற உயர் ஸ்தானிகர் அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளுடன் உரையாடினார். தென்னிந்திய தொழில் வர்த்தக சபையால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வர்த்தக மற்றும் முதலீட்டு நிகழ்வொன்றில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக சமூகத்துடன், இலங்கையில் இந்திய
வணிகத் துறைக்கு காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கான நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து உயர் ஸ்தானிகர் கலந்துரையாடினார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோரை சந்தித்த உயர் ஸ்தானிகர் ஒன்றிய பிரதேசத்தின் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினருடனான ஆக்கபூர்வமான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவ சங்கங்களுக்கு இடையிலான சந்திப்புக்கள் மற்றும் மீன்பிடி குறித்த இந்திய இலங்கை கூட்டு செயற்குழு அமர்வு ஆகியவற்றை முற்கூட்டியே நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துடன் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில், இயக்க முடியாத நிலையில் உள்ள இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பான வாய்ப்புக்கள் குறித்து தீர்மானிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் உயர் ஸ்தானிகரிடம் கூறப்பட்டது.

வணிகம், வர்த்தகம், தொடர்பாடல், சுற்றுலா உள்ளிட்ட துறைகளிலும் குறிப்பாக விவசாயம், இயற்கை வேளாண்மை, மீன் வளம், மீன்வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி, கப்பல் மற்றும் துறைமுகங்கள், மருத்துவ சுற்றுலா மற்றும் கலாசார பரிமாற்றம் சார்ந்த துறைகளிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இந்திய மற்றும் இலங்கை மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பல அம்சங்களைப் பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஜயம் பயனுள்ள வாய்ப்புக்களை வழங்கியது.