கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பிரதமருடன் பேசப்படவில்லை: கூட்டமைப்பும், பிரதமர் அலுவலகமும் மறுப்பு

 கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பிரதமருடன் பேசப்படவில்லை: கூட்டமைப்பும், பிரதமர் அலுவலகமும் மறுப்பு

கல்முனை நகரை இரண்டாகப் பிரித்து, தற்போது இயங்கும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என சமூக ஊடங்களில் வெளியான செய்தி பொய்யானது என விடியல் இணையத்தளத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல், கடந்த திங்கட்கிழமை (04) பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. எனினும் இந்த செய்தியினை பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்–19 பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.

இச்சந்திப்பு திங்கட்கிழமை (04) அலரி மாளிகையில் சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. இச்சந்திப்பின் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பிரதமரிடம் கோரிக்கையொன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதாவது, "தற்போது கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டி, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வுகாணுமாறு" அதில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றையும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தினை தொடர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பிரத்தியேகமான சந்திப்பொன்றும் அதே தினமான திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

கொழும்பு - 07 விஜேயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் - தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, கொரோனா அசாதாரன நிலையினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரணப் பணிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தரான ரூமி ஜௌபர் என்பவரினால் கடந்த திங்கட்கிழமை இரவு 10:37 மணியளவில் “பறிபோகிறது கல்முனை - வரலாற்று துரோகத்தின் விதை மு.கா. + அ.இ.ம.கா. என்ற தலைப்பில் தகவலொன்றினை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் கல்முனை நகரினை இரண்டாகப் பிரித்து, தற்போது இயங்கும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையினை பிரதமர் உடனடியாக செய்துதருவதாக கூறியுள்ளாராம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி இணையத்தளத்தில் பதிவேற்றும் நேரமான மே 6ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10:35  மணி வரை 21 பேர் பகிர்வுகளையும், 54 பேர்   கருத்துக்ளையும் பேஸ்புகில் இந்த பதிவிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமல்லால், இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையினை அறியாமல், பலர் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் வட்ஸ்அப் குழுமங்களில் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த செய்தியினை அவர் நிராகித்தார்.

“அத்துடன் பிரதமருடனான நேற்றை சந்திப்புக்கள் எதிலும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்வு குறித்து எவ்வித கருத்துப் பதிவுகளும் இடம்பெறவில்லை” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முதலாவதாக பேஸ்புக்கில் பதிவேற்றிய ரூமி ஜௌபரினை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியது. இதன்போது அவர் விடியல் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கோரிக்கை கடிதமொன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கைக்கு சார்பான பதிலொன்று பிரதமரினால் அவ்விடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் எந்தவித கருத்துப் பரிமாறலும் இடம்பெற்றிருக்கவில்லை என, சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், விடியல் இணையத்திற்கு தெரிவித்த விடயம் தொடர்பில் ரூமி ஜௌபரிடம் வினவியபோது,

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறுவதெல்லாம் உண்மையில்லை. பிரதமருடனான கூட்டத்தில் கல்முனை விவகாரம் தொடர்பில் எதுவும் பேசவில்லை என்பது தொடர்பில்  ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் விடச் செல்லுங்கள். அதற்கு பிரதமர் அலுவலகம் நிச்சயம் பதிலளிக்கும்” என்றார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரான விஜயானந்த ஹேரத்தினை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியபோது, “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பின்போது கல்முனை விவகாரம் தொடர்பில் எந்தவித பேச்சும் இடம்பெறவில்லை" என்றார்.