மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னரும் சம்பளம் பெறும் தவிசாளர்களும், அவர்களின் ஆளணியும்

மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னரும் சம்பளம் பெறும் தவிசாளர்களும், அவர்களின் ஆளணியும்

தகவலறியும் விண்ணப்பங்களின் ஊடாக பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரை

றிப்தி அலி

நாட்டிலுள்ள மாகாண சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் தவிசாளர்களுக்கும் அவர்களுக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் மாதாந்த சம்பளம், வாகன வசதிகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக அம்பலமாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக நாடு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் எந்தவித கடமைகளையும் நிறைவேற்றாத கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும் அவர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கும் மாதாந்தம் சுமார் 60 இலட்சம் ரூபா நிதி அரசினால் செலவிடப்படுகின்றது.

இதேவேளை, சுமார் 20 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட நிதி கலைக்கப்பட்டுள்ள ஒன்பது மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும் அவர்களின் பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் கடந்த பல வருடங்களாக அரசினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உதாரணமாக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட போதிலும், அதன் தவிசாளர் சந்திரதாச கலப்பதிக்காகவும் அவருடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்காகவும் 2021 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் 4 கோடி 97 இலட்சத்து 77 ஆயிரத்து 327 ரூபாவினை அரசாங்கம்  செலவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்த விடயம் தொடர்பில் ஒன்பது மாகாண சபைகளின் பேரவைச் செயலகங்களிற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இக்கட்ரை எழுதப்படுகின்றது.

1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 7ஆவது பிரிவில் "மாகாண சபை கலைக்கப்படும் போதெல்லாம், கலைத்தலின் பின்னர் சபையின் முதலாவது கூட்டத்துக்கு நேர்முன்னர் வரை தவிசாளர் தமது பதவியை வறிதாக்குதலாகாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரத்திற்கமையவே கடந்த பல வருடங்களாக கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்கள் தற்போது வரை பதவியில் உள்ளனர். எவ்வாறாயினும், மாகாண சபைகளை விட அதிகாரம் கூடிய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் தானாகவே பதவியினை இழக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கலைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாவார்.

இதில் கலைக்கப்பட்ட வட மத்திய மாகாண சபையின் தவிசாளரான டி.எம்.அமரதுங்க, கடந்த 2019.05.04ஆம் திகதி காலமாகியுள்ளார். இதனையடுத்து அவருக்கும் அவருடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், வட மத்திய மாகாண சபை கலைக்கப்பட்டது முதல் அவர் மரணிக்கும் வரை பணியாற்றிய 19 மாதங்களுக்காக 80 இலட்சத்து 9 ஆயிரத்து 678 ரூபா பெறுமதியான சலுகைகள் அவருக்கும் அவருடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் சபைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதும், அக்கூட்டத்தினை ஒழுங்காக வழிநடத்துவதுமே தவிசாளரொருவரின் பிரதான பணியாகும்.

எவ்வாறாயினும், மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் குறித்த பணியினை தவிசாளர்களினால் மேற்கொள்ள முடியாது. மாகாண சபைச் சட்டத்தில் கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்கள் எந்தவித கடமைகளையும் நிறைவேற்றாது பல்வேறு சலுகைகளை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

"இச்சட்டத்தின் 7ஆவது பிரிவிலுள்ள சரத்தொன்றினை அடிப்படையாகக் கொண்டு மாத சம்பளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்குமாறு கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்" எனப் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபையொன்றின் பேரவைச் செயலாளர் தெரிவித்தார்.

 இதேவேளை, கலைக்கப்பட்ட ஊவா மாகாண சபையின் தவிசாளருக்கு வாகனம் வழங்கப்படாமல், அதற்கான கொடுப்பனவாக மாதந்தம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக எரிபொருள் கொடுப்பனவாக 58 ஆயிரத்து 500 ரூபாவும், தபால் சேவைக்கு 24 ஆயிரம் ரூபாவும், முத்திரை வசதிக்காக 30,000 ரூபாவும் மாதாந்தம் அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

கலைக்கப்பட்ட தென் மாகாண சபையின் தவிசாளரின் வீட்டு வாடகையாக மாதாந்தம் 50,000 ரூபா வழங்கப்படுகின்றது.  இதேவேளை, 2018.10.12ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரான உதய ஆர். செனவிரத்னவின் PS/CSA/00/1/4/2 இலக்க சுற்றுநிரூபத்திற்கமைய தவிசாளர்கள் மொத்தமாக 10 பிரத்தியேக  உத்தியோகத்தர்களையே நியமிக்க முடியும்.

எனினும் குறித்த சுற்றுநிரூபத்தினை மீறி பல கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்கள் தனிப்பட்ட உத்தியோகத்தர்களை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த சம்பளம் மாகாணங்களுக்கு இடையில் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக  பிரத்தியேக செயலாளர், இணைப்புச் செயலாளர் மற்றும் பொதுசன தொடர்பு அதிகாரி ஆகிய மூவருக்கும் மாகாண சபையினால் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான எரிபொருள் கொடுப்பனவாக முறையே 240 லீற்றர், 218 லீற்றர் மற்றும் 218 லீற்றர் வீதம் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் சில மாகாண சபைகளினால் மேற்குறிப்பிட்ட மூன்று பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்படாமல் வாகனத்திற்கான வாடகைக் கொடுப்பனவு மாதாந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் இந்த வாகனங்களின் சாரதிகளுக்கு நாட் சம்பளமாக 850 ரூபா தென் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மூன்று பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் சப்ரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளினால் தொலைபேசி கொடுப்பனவாக மாதாந்தம் 6,000 ரூபா வரை வழங்கப்படுகின்றது.

இதற்கமைய, கடந்த பல வருடங்களாக கலைக்கப்பட்டுள்ள ஒன்பது மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும் அவர்களின் பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் சுமார் 20 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட நிதி அரசினால் செலவளிக்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவுகளை இடைநிறுத்த சில மாகாண ஆளுநர்கள் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம்

கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களின் பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம்

எவ்வாறாயினும், "நிர்வாக அதிகாரம் மற்றும் சபையினைக் கூட்டும் அதிகாரம் தற்போது எம்மிடம் இல்லாவிட்டாலும் மாகாணத்திலுள்ள அதிகாரிகளுடன் காணப்படுகின்ற தொடர்பாடலின் ஊடாக பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" என கலைக்கப்பட்ட வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

மாகாண சபை சட்டத்திற்கு அமையவே நான் தற்போதும் தவிசாளராக செயற்படுகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். "பொதுமக்களினால் என்னிடம் முன்வைக்கும் முறைப்பாடுகளை தீர்த்து வைக்க இந்தப் பதவியின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றேன" என சிவஞானம் மேலும் கூறினார்.

இதேவேளை, வட - கிழக்கு மாகாண சபை  1990.06.07ஆம் திகதி கலைக்கப்பட்ட போது தவிசாளராக செயற்பட்ட ராம் ராஜகாரியர், மாகாண சபை சட்டத்திற்கினங்க சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பல வருடங்களாக பெற்று வந்துள்ளார்.

எனினும், விசேட அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக குறித்த சலுகைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாக கலைக்கப்பட்ட வட - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரொருவர் தெரிவித்தார்

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறுவதற்காக தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ராம் ராஜகாரியர் மற்றும் வட – கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரகவும் பேரவைச் செயலாளராவும் செயற்பட்ட கணேஷமூர்த்தி உள்ளிட்ட பலரைத் தொடர்புகொள்ள பல மாதங்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

இதேவேளை, கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பள விபரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பம் மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகத்தினால் மாத்திரம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்பு எதிராக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கலைக்கப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் தவிசாளரான காஞ்சன ஜெயரத்ன, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பிரத்தியேக செயலாளராக செயற்படுவதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

இதற்கமைய, 2019 நவம்பர் முதல் 2021 ஆகஸ்ட் வரையான காலப் பகுதியில் சுகாதார அமைச்சராக செயற்பட்ட பவித்ரா வன்னியாரச்சியின் பிரத்தியேக உத்தியோகத்தர்களின் சம்பள விபரத்தினை வழங்குமாறு சுகாதார அமைச்சின் பிரதம நிதி அதிகாரி  - 01 ஆக செயற்படும் திருமதி டி.சி. விக்ரமசேனவிடம் கையளிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு இன்று வரை  எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் குறித்த அதிகாரியினை நேரில் சந்தித்து இந்த விண்ணப்பம் தொடர்பில் வினவியதற்கு, "முன்னாள் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக உத்தியோகத்தர்களின் சம்பள விபரங்களை அவர்களின் அனுமதியின்றி வழங்க முடியாது" என்றார்.