இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் விசா பெற வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் விசா பெற வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமிடமிருந்து விசா மற்றும் கொன்சியூலர் சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று (02) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"விசா மற்றும் ஏனைய சேவைகள் தொடர்பாக இலங்கை பிரஜைகளிடமிருந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் பல்வேறு கோரிக்கைகளை பெற்றுள்ளது. சாத்தியமான சகல வழிகளிலும் இக்கோரிக்கைகளுக்கு சேவை வழங்குவதில் உயர் ஸ்தானிகராலயமும், உத்தியோகத்தர்களும் வழமைபோலவே அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலை தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகளுக்கு அமைவாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களும் துரதிஸ்டவசமாக அதிகரித்த நிலையில் உள்ளதுடன் டெல்டா வகையான கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் காணப்படும் நிலையிலும் பொதுமக்களின் நலன்களின் மீதான அக்கறை காரணமாக சூழலுக்கு ஏற்றவாறு அலுவலக கடமைகளை முன்னெடுப்பதற்கு உயர் ஸ்தானிகராலயம் தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக விசா மற்றும் ஏனைய கொன்சியூலர் சேவைகளுடன் தொடர்புடையவை உள்ளிட்ட பொதுமக்களுக்கான சேவைகளை பூர்த்திசெய்வதில் மேலதிக நேரம் செலவிட வேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.  

மேல் குறிப்பிட்டுள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு உயர் ஸ்தானிகராலயமிடமிருந்து விசா மற்றும் கொன்சியூலர் சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென அறியத்தருகின்றோம்.

பாதுகாப்பானதும், கொவிட் சூழலுக்கு உகந்ததுமான பயணங்களின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் - மக்கள் தொடர்பினை ஊக்குவித்து மிகவும் புராதனமானதும், நெருக்கமானதுமான நட்புறவை வலுப்படுத்துவதில் உயர் ஸ்தானிகராலயம் உறுதியான அர்ப்பணிப்பினைக் கொண்டுள்ளது".