பொறுப்பில் இருந்து விலகமாட்டேன்: ஜனாதிபதி

 பொறுப்பில் இருந்து விலகமாட்டேன்: ஜனாதிபதி

அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊழலற்றதும் மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட வேண்டும். பல நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதனை வேலை வாய்ப்பில் நிரப்பாமல், அவற்றை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களாக மாற்றுவதே அமைச்சரின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மத்தியில் இன்று, (18) முற்பகல் உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பதற்கான தனது பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மக்கள் படும் இன்னல்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கும்பல் உருவாகியுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிடும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அரசியல் காரணங்களால் பல தசாப்தங்களாக தாமதமாகி வரும் சில தீர்மானங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சட்டம் இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியது. அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகள் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு நிறைவேற்றிக்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்காக எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பொருளாதாரத்தை சீர் செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதியுயர் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.