பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வியாபார அபிவிருத்திக்கான உதவி

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வியாபார அபிவிருத்திக்கான உதவி

வடக்கில் பெண்கள் சொந்தமாக மேற்கொள்ளும் வணிகங்களை ஆதரிப்பதற்காக ஐ.நா பெண்கள் அமைப்பு, கிறிசாலிஸ் உடன் இணைந்து அண்மையில் 13.4 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான உபகரணங்கள் மற்றும் வளங்களை வழங்கியது.

இந்த நடவடிக்கை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட சமூகங்களில் உள்ள மீள்குடியேற்றப்பட்ட பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் பாரிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நிலையான வருமானம் மற்றும் நீண்ட கால சுயவேலைவாய்ப்பை ஆதரிப்பதற்காக சிறு வணிக உரிமையாளர்களை, குறிப்பாக தொழில் முயற்சியாண்மை திறன் கொண்ட பெண் குடும்பத் தலைவர்களை வலுவூட்டுவதை இந்த செயற்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட பெண் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு வணிக மேம்பாடு, நிதியியல் அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஐ.நா பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசாலிஸால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியில் பங்கேற்ற எஸ்.ராதிகா கூறும் போது:

“நான் இப்போது நம்பிக்கையான பெண் தொழிலதிபராக எனது தொழிலை நடாத்தி வருகிறேன். இங்கு வழங்கப்பட்ட நான்கு வகையான வணிக திறன் விருத்திப் பயிற்சிகள் மூலம் எனது வணிகத் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னராக எனது தயாரிப்புகளின் விலை நிர்ணயம் மற்றும் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவது தொடர்பில் எனக்கு போதுமான அறிவு இருக்கவில்லை. எனது பணியாளர் முகாமைத்துவமும் மிகவும் மோசமாக இருந்தது.

ஆனால் இந்தப் பயிற்சிகளைப் பெற்றதிலிருந்து, கிடைக்கக்கூடிய வளங்களைத் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கும் எனது திறமைகளை மேம்படுத்திக் கொண்டேன்” என்றார்.

பெண் தொழில்முயற்சியாளர் மற்றும் சிறு வணிகங்கள் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பாரபட்சமாக பாதிக்கப்படும் நேரத்தில் இந்த வகையிலான ஆதரவு வழங்கப்படுகிறது.

இந்த உதவி வழங்கல் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட முக்கியமான பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண அதிகாரிகள் கலந்துகொண்டனர்.