உயிர் காக்கும் இரத்த தானம் வழங்க முன்வருமாறு கோரிக்கை

உயிர் காக்கும் இரத்த தானம்  வழங்க முன்வருமாறு கோரிக்கை

றிப்தி அலி

ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு தடவை உலகில் யாராவது ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் உங்கள் இரத்தம் ஒரு உயிரை விட மேலனதாக மாறிவிடுகின்றது.

விபத்துக்குள்ளானவர்கள், குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், பாரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் போன்றவர்களுக்கு முழு இரத்தம் தேவைப்படுகிறது.

அங்கே உங்கள் இரத்தம் பரிசோதனைக்குப் பிறகு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மிகவும் பெறுமதியான இந்த இரத்தத்திற்கு இன்று எமது நாட்டில் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்த குருதி தட்டுப்பாட்டினை நீக்குவதற்காக உடனடியாக இரத்த தானம் மேற்கொள்ளுமாறு தேசிய இரத்த மாற்று சேவையகம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

"கொவிட் வைரஸ் பரவலினை அடுத்து நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாகவே குருதிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" என தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறினார்.

நாடளாவிய ரீதியில் தினசரி 450 மில்லி லீற்றர் பெறுமதியான 800 – 900 பக்கெற்று குருதி தேவைப்படுகின்றது. எனினும் தற்போது சுமார் 600 – 700 பக்கெற்று குருதியே எமக்கு கிடைக்கின்றது.

இதனால் 200 – 300 பக்கெற்று குருதி தினசரி தற்பாடு நிலவுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்தானம் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கு இரத்த தானம் மேற்கொள்ள முடியும்?

நாடளாவிய ரீதியில் 107 இரத்த வங்கிகள் காணப்படுகின்றன. நிர்வாக தேவைகளுக்காக இவை 24 கொத்தணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொத்தணியும் இரத்தமாற்று தொடர்பான விசேட வைத்தியர் நிபுணரொருவரின் கீழ் செயற்படும்.

இந்த இரத்த வங்கிககள் பின்வரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:
1.    இரத்தம் சேகரித்தல்.
2.    இரத்தம் சேகரித்தல், சுத்திகரிப்பு.
3.    இரத்தம் சேகரித்தல், சுத்திகரிப்பு, இரத்தம் மூலம் பரவும் நோய்த் தொற்றுக்ளை அடையாளம் காணல்.

மேற்குறிப்பிட்ட வகைகளில் உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கியொன்றுக்கு காலை 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரையான காலப் பகுதியில் நேரடியாக விஜயம் செய்வதன் ஊடாக இரத்த தானம் மேற்கொள்ள முடியும்.

அவ்வாறில்லாவிடின் தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் 24 மணி நேர தொலைபேசி இலக்கங்களான 0115332153 மற்றும் 0115332154 ஆகியவற்றிவற்றின் ஊடாக தொடர்புகொண்டு இரத்ததானம் வழங்குவதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் இணையத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம் மூலம் இரத்ததானம் வழங்குவதற்கான முன்பதிவு செய்ய முடியும்.

அதேவேளை, கொத்தணி இரத்த வங்கிகளின் நிபுணரை தொடர்புகொண்டு தங்கள் பிரதேசங்களில் சிறியளவினால் இரத்ததான முகாம்களை ஏற்படும் செய்ய முடியும். இதன்போது, கொவிட் சுகாதார வழிகாட்டுதல்கள்   கட்டாயம் பின்னபற்றப்பட வேண்டும்.

யார் இரத்தம் வழங்க முடியும்:

18 வயதினை பூர்த்தி செய்த அனைவரும் இரத்தம் வழங்க முடியும். எனினும் இள வயதினரையே தேசிய இரத்த மாற்று சேவையகம் அதிகம் எதிர்பார்க்கின்றது.

எனெனில், இவர்கள் - நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்களாகவும், நோய் குறைந்தவர்களாகவும் காணப்படுவதாகும். இதனால் இவர்களுடைய இரத்தம் சிறந்த தரமிக்கவையாகும் என தேசிய இரத்த மாற்று சேவையகம் கூறுகின்றது.

எவ்வளவு காலத்திற்கொரு தடவை இரத்தம் வழங்க முடியும்:

ஆகக் குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை இரத்தம் வழங்க முடியும். அவ்வாறில்லாவிட்டால் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு தடவை இரத்த தானம் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு மேற்குறிப்பிட்ட காலப் பகுதியொன்றில் தொடர்;ச்சியாக இரத்த தானம் மேற்கொள்வது சிறந்த சுகாதார பாதுகாப்புமாகும். அதேபோன்று, மீண்டும் மீண்டும் இரத்ததானம் மேற்கொள்பவர்கள் தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் சொத்தாக கருதப்படுகின்றனர்.

யார் இரத்ததானம் வழங்க முடியாது:

மலேரியா, ரெப்டைஸில் பீ. சீ. ஏச்.ஐ.வி, சிபிலிக் போன்ற நோயுள்ளவர்கள் ஒருபோதும் இரத்த தானம் மேற்கொள்ள முடியாது. இந்த நோய் தொற்றுள்ளவர்களின் இரத்தத்தினை பெருகின்றவர்களுக்கு குறித்த நோய் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறுகின்றார்.

அது போன்று நீரழிவு மற்றும் உயர் குருதி அமுக்க நோயாளர்களையும் இரத்ததானம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நோயாளர்களின் உடல் நிலமை கருதியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணமாக நீரழிவு நோயாளரிடமிருந்து இரத்தம் சேகரிக்கின்ற போது அவருக்கு நீரழிவு குறைவடைய வாய்ப்புள்ளது. இதனால் அவரது உடலுக்கு பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவே மேற்குறிப்பிட்ட தொற்றா நோய உள்ளவர்களிடமிருந்து இரத்தம் பெறுவதை தவிர்க்கின்றோம்.

சேரிக்கப்படும் இரத்தம் யாருக்கு பயன்படுத்தப்படுகின்றது:

சேகரிக்கப்படும் அதிகமான இரத்தங்கள் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகும் நபர்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. நாடு மூடக்கப்பட்டதன் காரணமாக இந்த விபத்துக்கள் குறைவடைந்திருந்தன. இதனால் இரத்தம் தேவையில்லை என்று யாருக்கும் நினைக்க கூடாது என வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறுகிறார்.

எனெனில், வைத்தியசாலைகளின் சத்திரச சிகிச்சை போன்ற வழமையான செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு இரத்தம் தேவை. அதுபோன்று சிறுநீரக நோயளிகள், புற்று நோய்க்காக சிகிச்சை பெறுபவர்கள், தலசீமியா நோயாளர்கள், பிரசவத்தின் போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு தேவையான இரத்தம் வழங்க வேண்டியுள்ளது. மேற்படி தரப்பினருக்கான இரத்தம் நாடளாவிய ரீதியிலுள்ள இரத்த வங்கிகளின் ஊடாகவே வழங்கப்படுகின்றமை முக்கிய விடயமாகும்.

சேகரிக்கப்படும் இரத்தம் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது:

இரத்தம் சேகரிக்கப்பட்டவுடன் நோயாளிக்கு பயன்படுத்துவது என சில நினைக்கின்றர். இது முற்றிலும் தவறாகும். சேகரிக்கப்படும் இரத்தங்கள் 100 சதவீதம் முழுமையாக நோயாளிகளுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை.

சேகரிக்கப்படும் ஒவ்வொரு இரத்த பக்கெற்றுகளின் மாதிரிகளும் பரிசோதனைக்காக கொத்தணிக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு, குறித்த இரத்த மாதிரியில் மலேரியா, ரெப்டைஸில் பீ. சீ, ஏச்.ஐ.வி, சிபிலிக் ஆகிய நோய்கள் காணப்படுகின்றதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  

குறித்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு 'நொகடிவ்' என்று அறிக்கை வரும் வரை அவை பயன்படுத்தப்படமாட்டாது. இதேவேளை, குறித்த பரிசோதனையின் அறிக்கை 'பொசிடிவ்' என்று வெளியானால், உடனடியாக சேகரிக்கப்பட்ட இரத்த வங்கி அறிவிக்கப்பட்டு குறித்த இரத்த பக்கெற் தனிமைப்படுத்தப்படும்.

அது மாத்திரமல்லாமல் குறித்த இரத்த பொதி தேசிய இரத்த மாற்று சேவையகத்திற்கு  அனுப்பப்ட்டு இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதுவும் 'பொசிடிவ்' என்று வந்தால் குறித்த இரத்த பக்கெட் பயன்படுத்தப்படமாட்டாது.

இது தொடர்பில் இரத்தம் வழங்கிய நபருக்கு அறிவிக்கப்படுவதுடன் மேற்;படி  நோய்களின் தேசிய நிலையங்களுக்கும் அறிவிக்கப்படும். அது மாத்திரமல்லாமல் குறித்த நன்;கொடையாளர் எதிர்காலத்தில் இரத்தம் வழங்க முடியாதவாறு தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் கணனி வலையமைப்பில் தடை செய்யப்படுவார்.

இதேவேளை, 'நெகடிவ்' என பரிசோதனை முடிவு வருகின்ற இரத்த பக்கெற்றுக்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்படும். குறிப்பாக நீல, சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள், பிளேட்லட்டுக்கள், பஸ்மைசர் என பிரிக்கப்பட்டு பாதுக்காப்பாக சேமித்து வைக்கப்படும்.  

தேவை எற்படும் போது இந்த கூறுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு இரத்த வங்கியும் சிறிய தொழிற்சாலை போன்று செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறு இரத்தம் சேகரிக்கப்படுகின்றன:

பொதுமக்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்படும் இரத்ததான முகாம்கள் மற்றும் மற்றும் நேரடியாக இரத்த வங்கிக்கு விஜயம் செய்து இரத்தம் வழங்கல் ஆகிய இரு வழிகளின் ஊடாக இரத்த சேகரிப்பு இடம்பெறுகின்றது.

அத்துடன், தேசிய இரத்த மாற்று சேவைக்கும் குருதி நன்கொடையாளர்களுக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்தும் இடைத் தரகர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் தொண்டர் அடிப்படையிலேயே இதனை மேற்கொள்கின்றனர். இவர்களின் பங்களிப்பு அளப்பரியது என தேசிய இரத்த மாற்று சேவையகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமல்லாமல் சிலர் வருடாந்த அடிப்படையில் மீண்டும் மீண்டும் இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர். எனினும் கொவிட் பரவல் காரணமாக இந்த முகாம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாட்டில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனினும் இரத்ததான முகாம்களை உடனடியாக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்வதன் ஊடாக இந்த பற்றாக்குறையினை தீர்க்க முடியும் என பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டார்.

நோயார்களுக்கு இரத்தம் வழங்குவதற்கு கட்டணம் அறவிட முடியுமா?

இல்லை. இதுவொரு இலவச சேவையாகும். அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு தேவையான இரத்தம் தேசிய இரத்த மாற்று சேவையகத்தினால் வழங்கப்படும்.

எனினும், தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் இரத்தத்திற்கு கிரயத்தின் அடிப்படையில் கட்டணம் அறிவிடப்பட்டு திறைசேரிக்கு வழங்கப்படும்.

அதேநேரம், தனியார் வைத்தியசாலைகளினால் நோயாளர்களுக்கு இரத்தம் வழங்கியதற்காக இலாபம் நோக்கில் கட்டணம் அறவிட முடியாது. இது தொடர்பில் தேசிய இரத்த மாற்று சேவையகத்திற்கு முறைப்பாடு கிடைத்தால், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு நாட்டு மக்களுக்கு தேவையான இரத்தத்தினை வழங்கி வருகின்ற தேசிய இரத்த மாற்று சேவை, அரசாங்கத்தின் இலவச சுகாதார சேவையில் ஒன்றாகும்.

இந்த செயற்பாடு கடந்த 1950ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, கடந்த 2013 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு தேவையான 100 சதவீத இரத்ததினை தேசிய இரத்த மாற்று சேவையகத்தினால் சேகரிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகலாவிய ரீதியில் சுமார் 50 நாடுகளில் மாத்திரமே தேசிய ரீதியாக இரத்தம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதில் இலங்கையும் ஒன்று என்பது முக்கிய விடயமாகும்

நாட்டு மக்களுக்கு வினைத்திறனான சேவையினை வழங்கி வருகின்றமையினால் சர்வதேச தரத்திலான பல சான்றிதழ் விருதுகளை பெற்றுள்ள தேசிய இரத்த மாற்று சேவைக்கு இரத்த தானம் வழங்கி பங்களிப்பு செலுத்துவது ஒவ்வொரு தனிநபரினதும் தலையாய கடமையாகும்.