மத்திய கிழக்கில் உண்மையான அமைதியினை ஏற்படுத்த இலங்கைக்கு குவைத் அழைப்பு

மத்திய கிழக்கில் உண்மையான அமைதியினை ஏற்படுத்த இலங்கைக்கு குவைத் அழைப்பு

றிப்தி அலி

மத்திய கிழக்கில் உண்மையான அமைதியினை ஏற்படுத்துவதற்காக அரபு நாடுகள் முன்னெடுத்துள்ள முயற்சிக்கு இலங்கை தொடர்ச்சியான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்துள்ளது.

"எங்களின் நட்பு நாடு என்ற வகையிலேயே இலங்கையிடம் இந்த கோரிக்கையினை முன்வைக்கின்றோம்" என இலங்கைக்கான குவைத் தூதுவர் கலஃப் பு தைர் தெரிவித்தார்.  

குவைத்தின் 52ஆவது தேசிய தினம் மற்றும் 32ஆவது விடுதலை தினம் ஆகியவற்றின் நிகழ்வு கடந்த புதன்கிழமை (22) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே குவைத் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான குவைத் தூதுவர் கலஃப் பு தைர்,

"பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குவைத் பாரிய பங்கு வதித்து வருகின்றது. அத்துடன் சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸினால் 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்க்பட்ட அரபு நாடுகளின் முயற்சியின் முக்கியத்துவத்தினையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் இரு நாடு தீர்வு சர்ச்சை, பலஸ்தீனத்தின் தலைநகரான கிழக்கு ஜெரூஸலத்தில் 1967.06.04ஆம் திகதி வரை ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பலஸ்தீன் அரசினை உருவாக்கல் போன்ற பலஸ்தீன் மக்களின் நியாயமான உரிமைகளையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

சர்வதேச மற்றும் பிராந்திய கொள்கை நிபந்தனைகளின் அடிப்படையில் அமைதியை கட்டியெழுப்பவும், நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்க்கவும் குவைத் பாரிய பங்காற்றி வருகின்றனது.  

அது மாத்திரமல்லாமல், சர்வதேச சமூகத்தில் மிகவும் சுறுசுறுப்பான நாடு என்ற வகையில் சர்வதேச சமாதான முயற்சிகளுக்கு தேவையான பங்களிப்பினையும் குவைத் வழங்கி வருகின்றது. இந்த அடிப்படையிலேயே பலஸ்தீன மக்களுக்காக குவைத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றது.

இலங்கை போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து மத்திய கிழக்கில் ஏறபட்டுள்ள பிரச்சினையினை தீர்க்க குவைத் போராடி வருகின்றமையினை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

குவைத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவினை எப்போதும் வலுப்படுத்தவே இரு நாடுகளும் தயாரகவே உள்ளன. அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் 52 வருடங்களுக்கு முன்பே இராஜந்திர உறவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவின் சிறிய நாடான குவைத், உள்ளூர், பிரந்திய மற்றும் சர்வதேச ரீதியில் அடைந்துள்ள சாதனைகளை இந்த நிகழ்வில் ஞாபகமூட்டுகின்றேன். ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே எமது நாட்டின் அரசிலமைப்பு 1962 இல் வரையப்பட்டது.

இதன் ஊடாக மக்கள், அவர்களின் அரசியலமைப்பு, உரிமைகள் மற்றும் கடமைகளை ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படையில் நாட்டின்  நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியைப் பாதுகாக்கவும் பெற்றுக்கொண்டனர்.

இதனால், சர்வதேச அளவில் கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட ஆசியா முதல் ஆபிரிக்கா வரை அனைத்து நாடுகளுடனும் குவைத் நட்புறவினை பேணி வருகின்றது.

அது மாத்திரமல்லாது, 1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் மூலம் சர்வதேச ரீதயாக பல உதவிகளை குவைத் முன்னெடுத்து வருகின்றது. இதுவரை 105 நாடுகளுக்கு இந்த நிதியத்தினால் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களிற்கும் அதன் பல்வேறு நிதியங்களிற்கும் முக்கிய உதவியாளர்களின் ஒருவராக குவைத் இருந்து வருகின்றது.

குறிப்பாக இயற்கை அனர்த்தம், தொற்றுநோய்கள்  மற்றும் போர்களின் விளைவுகள் போன்றவற்றினை உலக நாடுகள் எதிர்நோக்குகின்ற சமயத்தில் குவைத் பாரிய உதவிகளை வழங்கி வருகின்றது. அத்துடன், சிறிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் குவைத் உதவி வழங்கி வருகின்றது" என்றார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, அமைச்சர்களான அலி சப்ரி, மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ருசைக் பாறூக்