ஒளி விரட்டும் முறையின் ஊடாக மனித – யானை மோதலை குறைக்க நடவடிக்கை

ஒளி விரட்டும் முறையின் ஊடாக மனித – யானை மோதலை குறைக்க நடவடிக்கை

றிப்தி அலி

இலங்கையை உலகுக்கு அடையாளப்படுத்தும் ஓர் அம்சமாக யானைகள் காணப்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கு இலங்கை என்ற உடனே கண்முன் தோன்றுவது யானைகளேயாகும்.

உலகிலுள்ள யானைகளின் பல்வகைமையில் ஆபிரிக்க மற்றும் ஆசிய யானைகள் பிரசித்தம் வாய்ந்தவையாகும். ஆசிய யானைகளிலேயே பெரியதும், கரியதுமானவை இலங்கை யானைகளேயாகும்.

எமது நாட்டின் நிலப்பரப்பில் 62 சதவீதமான பகுதியில் யானைகள் வாழ்கின்றன. இதில்  18 சதவீதமான பாதுகாக்கப்பட்ட வலயங்களாக உடவளவை, யால, லுணுகம்வெஹெர, மின்னேரியா மற்றும் வில்பத்து ஆகிய பிரதேசங்களிலுள்ள தேசிய பூங்காக்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, 44 சதவீத நிலப்பரப்பில் மனிதர்களும், யானைகளும் வாழ்கின்றன. அத்துடன் 70 சதவீதமான யானைகள் பாதுகாக்கப்பட்ட வலயங்களுக்கு வெளியிலேயே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அபிவிருத்திச் செயற்பாடுகள், பயிர்ச் செய்கைகள் மற்றும் குடியேற்ற திட்டங்கள் காரணமாக மேற்கொள்ளப்படும் காடழிப்பின் விளைவினால் யானைகள் தங்களது வாழ்விடங்களையும் வழிப் பாதைகளையும் இழக்கின்றன.

பிழையான திட்டமிடல்கள் மற்றும் சூழலியல் ஆய்வுகள் எதுவுமின்றி மேற்கொள்ளப்படும் இந்த  காடழிப்பினால் யானைகளுக்கான பிரதேசங்களில் தற்போது மனிதர்கள் வாழ்கின்றனர். இதனால், உணவு தேடி மனிதர்கள் வாழும் கிராமங்களுக்குள் யானைகள் நுழைகின்றன.

இதனால் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான மோதல் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல்கள் காரணமாக 2010ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 1,206 மனிதர்களும், 3,761 யானைகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித – யானை முரண்பாடு காரணமாக 2022ஆம் ஆண்டிலேயே அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது. 

உலகளாவிய ரீதியில் அதிகளவான மனித – யானை முரண்பாடு இடம்பெறும் நாடாக இலங்கை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல், இந்த முரண்பாடு காரணமாக அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாகவும் இலங்கை கண்டறியப்பட்டுள்ளது.  

இதனால், மனித – யானை மோதலை குறைப்பதற்காக பிரச்சினைக்குரிய யானைகளை இடமாற்றல், மின்சார வேலி அமைத்தல், யானைகளுக்கு வெடி வைத்தல், அகழிகள் அமைத்தல் மற்றும் யானைகளை விரட்டுதல் போன்ற நடவடிக்கைகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில், யானைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் செயற்றிட்டம் வெற்றியளிக்கவில்லை. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை 52 யானைகள் இடமாற்றப்பட்டுள்ளன.

இதில் 9 யானைகள் இன்னும் யானை சிறைச்சாலைக்குள் காணப்படுகின்றன. அத்துடன், 12 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 31 யானைகள் காற்றில் மாயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை அடுத்து அகழிகள் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் ஜெஹான் கனகரெட்ன தெரிவித்தார்.

மனித – யானை மோதலை குறைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த உடலியல் மற்றும் உளவியல் ரீதியான செயற்றிட்டங்கள் போதியளவில் வெற்றியளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் யானைகளை உயிரியல் ரீதியாக பலவீனமடையச் செய்யும் வகையில் ஒளி விரட்டும் முறையினை (Light Repel System) வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் 129 வருடங்கள் பழமை வாய்ந்த இச்சங்கம் உலகளாவிய ரீதியில் மூன்றாவது பழமையான இயற்கை பாதுகாப்பு அமைப்பாகவும் காணப்படுகின்றது.

மாதுரு ஓயாவிற்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்குள் யானைகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் பிரிகேடியரொருவரே ஒளி விரட்டும் முறையினை எமது நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொவிட் - 19 தொற்று காரணமாக பிரிகேடியர் உயிரிழந்ததை அடுத்து இந்த முறையினை வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் பொறுப்பெடுத்துள்ளது.

"இந்த செயற்றிட்டம் தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆவணமொன்றினை தயாரிக்கும் நோக்கில் தற்போது பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என இச்சங்கத்தின் தலைவர் ஜெஹான் கனகரெட்ன கூறினார்.

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களின் 24 இடங்களில் ஒளி விரட்டும் முறையின் ஊடாக யானைகளை விரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

விவசாயிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முறையின் ஊடாக யானைகளின் கண்களுக்கு வெளிச்சத்தினை செலுத்தி அவை விரட்டியடிக்கப்படுகின்றன.

விவசாய நிலத் துண்டொன்றில் ஐந்து மீற்றர் தூரங்களுக்கு இடையில் 8 – 9 அடி உயரத்தில் ஐந்து மின்குமிழ்கள் பொறுத்தப்படுட்டுள்ளன. யானையின் கண்களுக்கு நேரடியாக வெளிச்சம் செல்லும் வகையிலான உயரத்தில் இந்த மின்குமிழ்;கள் பொருத்தப்படுகின்றன.

ஒரு சதுர கிலோ மீற்றருக்கு தேவையான ஒளி விரட்டும் முறையின் அமைப்பதற்கு மூன்று இலட்சம் ரூபா தற்போது செலவாகின்றது. அத்துடன் 300 ரூபா வரையான மின்சாரம் மாதந்தம் தேவைப்படுகின்றது.

இந்த செயற்றிட்டம் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக விவசாயிகளினால் தினசரிப் புத்தகமொன்றும் பேணப்பட்டு வருகின்றது.

"கடந்த ஐந்து  வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த முறை 82 சதவீதம் வெற்றியளித்து வினைத்திறனாக இடம்பெறுகின்றது. இந்த முறை தொடர்பில் அரசாங்கத்திற்கு சில சிபாரிசுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜெஹான் கனகரெட்ன தெரிவித்தார்.

எமது சங்கத்தினை நம்பி இருக்காது விவசாயிகளே இந்த முறையினை முழுமையாகச் செய்ய வேண்டும். அதுதான் நிலைபேணத்தகு செயற்றிட்டமாகும். இந்த செயற்றிட்டம் தொடர்பில் விவசாயிகளுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை 100 சதவீதம் சரியானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், யானைகள் மிகவும்  புத்திசாலித்தனமானவையாகும். இதனால், ஒளி விரட்டும் முறை செயற்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்களில் யானைகள் பின் வழியினால் வந்துள்ளன எனவும் ஜெஹான் கனகரெட்ன கூறினார்.

இதேவேளை, மனித – யானை மோதலை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுகளை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள இரண்டு கிராமங்களின் நிர்வாக எல்லைகளைச் சுற்றி மின்சார வேலி அமைக்க ஜனாதிபதி செயலகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்கு மேலதிகமாக, குறித்த கிராமங்களில் ஒளி விரட்டும் முறையினையும் செயற்படுத்துமாறு வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பல்துறை பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதன் ஊடாக  மனித – யானை மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான அனுமதி கிடைத்ததும் யானைகளால் ஏற்படும் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மனித – யானை மோதல்களைத் தடுப்பதற்கு ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் அதேநேரம், பல்துறை பணியாளர்களை இணைத்துக் கொண்டால் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கான கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியும்" என அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆட்சேர்ப்பினை வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் வரவேற்பதாகத் தெரிவித்த இச்சங்கத்தின் தலைவர், இதன் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்தில் நீண்ட காலமாகக் காணப்படும் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

"விரும்பியோ விரும்பாமலோ நாம் யானையுடன் இணைந்தே வாழ வேண்டியுள்ளது. யானையினால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்பது இன்னும் உணரப்படவில்லை.

அத்துடன், யானைகள் தொடர்பில் எமது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் ஏற்பாடாமல் எந்த செயற்றிட்டத்தினை முன்வைத்தாலும் அது வெற்றியளிக்காது" என ஜெஹான் கனகரெட்ன மேலும் கூறினார்.