அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்ல பஸ்ஸின்றி தவித்த இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள்

அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்ல பஸ்ஸின்றி தவித்த இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள்

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றுள்ள இலங்கை ஹஜ் யாத்திரிகர்களில் சுமார் 200 பேர், அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்வதற்கு பஸ்ஸின்றி தவித்த சம்பவமொன்று நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதனால், குறித்த இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையொன்றும் ஏற்பட்டுள்ளது.

ஹஜ் கடமையினை நிறைவேற்றச் செல்லும் யாத்திரிகர்கள், அரபாவில் லுஹர் மற்றும் அஸர் ஆகிய தொழுகைகளை சேர்த்து தொழுதுவிட்டு அரபா பேருரையில் பங்கேற்பர்.

அங்கிருந்து மாலை வேளையில் முஸ்தலிபா நோக்கி பயணித்து மஹ்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழுதுவிட்டு அன்றிரவை அங்கு கழிப்பர். இது ஹஜ்ஜின் பிரதான கடமைகளின் ஒன்றாகும்.

இவ்வாறு அரபாவிலிருந்து முஸ்தலிபா சென்று தரிப்பதற்கு தயரான இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கே நேற்று (27) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (சவூதி அரேபியா நேரப்படி) வரை பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள், ஹஜ் முகவர்களுடனும், இலங்கை ஹஜ் குழுவினருடனும் முரண்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்றும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நள்ளிரவு தண்டியே குறித்த யாத்திரிகர்களுக்கு இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த பஸ்ஸில் பயணித்த யாத்திரிகர்கள் சவூதி அரேபியா நேரப்படி இன்று (28) புதன்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்ட பின்னரே முஸ்தலிபாவினை சென்றடைந்துள்ளனர்.

ஏற்கனவே அரபா மற்றும் மினா ஆகிய இடங்களில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கூடாரமின்றி தவித்தமையும் குறிப்பிடத்தக்கது.