ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்களும்

ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்களும்

ஏதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்ற உத்தியோகபூர்வமற்ற முன் அறிவிப்பொன்றினை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது.

எனினும் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கான நடவடிக்கைளில் அரச உயர் மட்டத்திலுள்ள சிலர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பல வருடங்கள் பிற்போடப்பட்ட பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியினை பெற்றதுடன் பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியினையும் கைப்பற்றியது.

இவ்வாறான நிலையில் ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் குறித்த மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் நடத்தப்படாமைக்கான பிரதான காரணம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமையாகும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இருப்பினும் மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் எமது கட்சி வெற்றி பெறும் என்பதாலேயே இந்த தேர்தல் நடத்தப்படவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலினை அடுத்து பல வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலினை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய எல்லை நிர்ணய அறிக்கையின்றி குறித்த தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியணத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரியிருந்தார்.

இது தொடர்பான இடையீட்டு மனுக்கள் அனைத்தினையும் கவனத்திலெடுத்த உயர் நீதிமன்றத்தின், நிலைப்பாடு விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என பிரதம நீதியரசர் அண்மையில் அறிவித்தார்.

இவ்வாறான நிலையில் முதலில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா? என்ற சர்ச்சை தற்போது ஏற்பட்டுள்ளது. "எவ்வாறாயினும் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும். இதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடனடியாக முடிவு காண முடியும்" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல சிவில் அமைப்புகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதா நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள், தங்களின் ஜனாதிபதி வேட்பாளர்களை பிரமாண்டமான மேடைகள் அமைத்து லட்சக்கணக்கான ஆதரவளார்கள் மத்தியில் அறிவித்தன.  

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், 20க்கு மேற்பட்ட சிவில் அமைப்புகளுடன் இணைந்து மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு சிங்கள மக்கள் மத்தியில் பாரிய ஆதரவு காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் வேட்பாளர் தொடர்பில் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை அவதானிக்க முடிகின்றது.  இதனை நிவர்த்தி செய்வதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை அக்கட்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து, சிறுபான்மையின மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்தால் என்ன என்ற கேள்வியினை எழுப்புகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஏற்கனவே கூறியது போன்று தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாதா நிலையில், மேற்குறிப்பிட்ட இரண்டு கட்சிகளும் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர்களை அவசரப்பட்டு அறிவித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஸ்திரத் தன்மையொன்றினை ஏற்படுத்தும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி இதுவரை தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் அக்கட்சிக்குள் பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச, தானாகவே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற பிரச்சாரமொன்றினை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசார நடவடிக்கைக்கு அக்கட்சியின் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர, கபீர் காசீம், ஹரீன் பெர்ணான்டோ, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஈரான் விக்ரமதுங்க, அஜித் பீ. பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஆதரவு வழங்கி வருகின்றனர். இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மீண்டுமொரு பாரிய பிளவொன்று ஏற்படுமா என்ற அச்சமொன்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பொது வேட்பாளரொருவர் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளதுடன் குறித்த தேர்தலில் அவர் களமிறங்க தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் சமூக ஊடகங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் முன்னாள் அமைச்சர்களான பசீர் சேகுதாவூத் மற்றும் எம்.ரீ.ஹசன் அலி ஆகியோருடன் இது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் பேச்சு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இந்த வருட இறுதியில் நடைபெறும் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது இன்று பரவலாக பேசப்படுகின்றன விடயமாகும்.
குறிப்பாக சிறுபான்மையினத்தவர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டக்கூடிய வாய்ப்பு ஒருபோதுமில்லை.

அதேவேளை, சிறுபான்மையினரின் வாக்குகளின்றி ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்பட முடியாது. குறிப்பாக 1994 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரபின் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மறைந்த எஸ்.தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவினாலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

அதேபோன்று 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் விடுதலை புலிகளின் அச்சுறுத்தலினால் தமிழ் மக்கள் குறித்த தேர்தலினை பகிஷ்கரித்தமையினாலலேயே மஹிந்த ராஜபக்ஷ,  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடன் இணைந்து 95 சதவீத முஸ்லிம் மக்கள் மைத்ரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியமை யாவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த தேர்தலின் பிற்பாடே நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் வீரியமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 12 வருட ஆட்சி கால பகுதியில் 2013ஆம் ஆண்டில் மாத்திரமே அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் இடம்பெற்றது.
எனினும் இந்த கலவரம் ஒரு நாளுடன் முடிவுக்கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் முஸ்லிம் சமூகத்தின் பங்குபற்றலுடன் சிறுபான்மை சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் திகன மற்றும் குருநாகல் பிரதேச முஸ்லிம்களின் பல்வேறு இழப்புக்களை எதிர்நோக்கினர்.

குறிப்பாக அம்பாறையில் ஆரம்பமான சர்ச்சை திகன பிரதேசத்தில் கலவரமாக முடிவடைந்தது. அதேபோன்று நீர்கொழும்பில் உருவான தனிப்பட்ட தகராறு சிலாபம், கொட்டரமுல்ல, குளியாப்பிட்டிய, பன்னல, மினுவாங்கொட என விரிந்து சென்றது. அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சம்பங்களை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர ஆட்சியாளர்களுக்கு பல நாட்கள் தேவைப்பட்டன.

இந்த கலவரங்கள் தொடர்பில் ஆட்சியாளர் சிறு அறிக்கையினை கூட வெளியிடவில்லை. ஆனால் அளுத்கம கலவரம் இடம்பெற்ற போது வெளிநாட்டிலிருந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு திரும்பியவுடன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக பேருவளைக்கு சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளின் போது மக்கள் விடுதலை முன்னணி பாரிய அளவில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாரளுமன்றத்திலும், பொது வெளியிலும் குரல்கொடுத்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

இப்படியான சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிப்பது என்று பாரிய கேள்வி தோன்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று தனித்து ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் முழு முஸ்லிம் சமூகமும் வாக்களிப்பது முட்டாள் தனமான விடயமாகும். கடந்த முறை மேற்கொண்ட இந்த தவறினை மீண்டுமொரு தடவை இலங்கை முஸ்லிம்கள் மேற்கொள்ளக்கூடாது.

அவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்ளின் எதிர்காலம் கேள்விக்குரியாகும். இதனால், குறித்த தேர்தலில் முன்னணியில் களமிறங்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் பகிர்ந்து தமது ஆதரவினை வழங்குவது காலத்தின் தேவையாகவுள்ளது.

அவ்வாறில்லாவிடின் முன்னணி இரு வேட்பாளர்களுக்கு 50:50 என்ற விகிதாசரத்தில் இலங்கை முஸ்லிம்கள் தங்களின் ஆதரவினை வழங்குவதே சிறந்ததாகும். அதேவேளை, முஸ்லிம் பொது வேட்பாளரொருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதென்பது தற்போதைய சூழ்நிலையில் சிறந்த விடயமொன்றல்ல.

இது சில தனிநபர்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு சிறந்ததாக காணப்பட்டாலும்,  முஸ்லிம் சமூகத்திற்கு எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதொன்றல்ல.

அதுமாத்திரமல்லாமல் முஸ்லிம் பொது வேட்பாளருக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒருமித்து வாக்களிப்பார்களாக என்பது பாரிய கேள்வியாகும். அத்துடன் தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அராசங்கத்தில் உள்ள முஸ்லிம் தலைமைகளான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் முஸ்லிம் பொது வேட்பாளரொருவரை களமிறக்குவதற்கு இணக்கம் தெரிவிப்பார்களா?

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் இறுதி நேரத்தில் தீர்மானங்களை மேற்கொண்டது போலல்லாமல் இந்த முறை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக இணைந்து முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் கட்சிகள் யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றது என்ற தீர்மானத்தினை முன்கூட்டியே முஸ்லிம் சமூகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

-றிப்தி அலி-