சமூகத்துக்காக பேசுபவர் முஸ்லிமா? கிறிஸ்தவரா? இந்துவா?

சமூகத்துக்காக பேசுபவர் முஸ்லிமா? கிறிஸ்தவரா? இந்துவா?

கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு முதலில் அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வீம்பு பேச்சினால் அது தடைப்பட்டுள்ளது: #மையோன்_முஸ்தபா (இவரது மகன் பொதுஜன பெரமுன சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்)

ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஹக்கீம் முதலில் நடந்துகொண்ட விதம் பெரும் தவறு. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் ஆதரவினைபெற்ற அவர், ஜனாதிபதியுடன் பேசி தீர்த்திருக்கலாம்: #முபாறக்_அப்துல்_மஜீத் (உலமா கட்சி என்ற பெயரில், ஒரு கழகத்தை வைத்துகொண்டு அரசாங்கத்துடன் ஒட்டுண்ணியாக இருப்பவர்)

கொரோனா சடலங்களை எரிக்கின்ற அரசின் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி, கிறிஸ்தவ சமூகத்தின் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளேன். அத்துடன் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளேன்: #ஓசல_ஹேரத் (இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்)

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரிப்பதை தடுக்கக்கோரி, நேற்று இரண்டு அடிப்படை உரிமைமீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளேன்: #சட்டத்தரணி_கெளரி_சங்கரி_தவராசா (பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு)

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஹில்மி அஹமட், பாத்திமா சில்மா மொஹிதீன், முஹம்மட பிஸ்ரி கஸ்ஸாலி ஆகியோரை மனுதாரர்களாக கொண்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது: #ஶ்ரீலங்கா_முஸ்லிம்_கவுன்சில்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. பாயிஸ் ஊடாக வழக்கொன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது: #SLMC

ஒரு ஜனாஸாவுக்குரிய கடமைகளை செய்வதுடன், அதனை நல்லமுறையில் அடக்கம் செய்வது பர்ளு கிபாயா. (அவர்களுக்கு) இதன் அர்த்தம் புரியாவிட்டால் தெளிவாக சொல்கிறேன்.

ஜனாஸாவுக்குரிய கடமைகளை ஒருசிலர் செய்துவிட்டால், நாம் அனைவரும் இறைவனிடம் தப்பிவிடுவோம். இல்லாவிட்டால் மையோன் முஸ்தபா, முபாரக் அப்துல் மஜீத், நான், நீங்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனிடம் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவோம்.

தான் சார்ந்திருக்கும் கட்சியை திருப்திப்படுத்த வேண்டும், தனது மகன் தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காக மார்க்கத்தின் அடிப்படை உரிமைகளில் தயவுசெய்து அரசியல் செய்யவேண்டாம். எஜமானர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதற்காக, சமூகத்துக்கு உதவி செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை. உபத்திரம் செய்யாமல் இருங்கள்.

#பிறவ்ஸ்