குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளரான டாக்டர் சரத் வீரபண்டாரவிற்கு எதிராக இன்று (13) புதன்கிழமை வைத்தியசாலையின் ஊழியர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் குருநாகல் போதானா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரான டாக்டர் சந்தன கென்டகமுவ பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த இடமாற்ற உத்தரவினை மீறி, டாக்டர் சரத் வீரபண்டார இன்று குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவருக்கு அங்குள்ள ஊழியர்களினால் பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் கூச்சலிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இடமாற்றத்தினை மீறி இவர் செயற்படும் நடவடிக்கை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதமொன்றினை எழுதியுள்ளது.

குருநாகல் போதானா வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியரான ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டினை இவர் முன்னின்று வழி நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.