பாகிஸ்தானினால் நன்கொடையாக வழங்கப்பட்ட வீதி நூலகம் திறப்பு

பாகிஸ்தானினால் நன்கொடையாக  வழங்கப்பட்ட வீதி நூலகம் திறப்பு

பாகிஸ்தான் மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இலங்கையின் முதலாவது வீதி நூலகம் இன்று (30) திங்கட்கிழமை கொழும்பு - 07 இல் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நட்புறவை மேலும் வலுப்படுத்துதன் நிமித்தமே இந்த நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புத்தகங்கள் இங்கு காணப்படுகின்றது.

இந்நூலகமானது புகழ்பெற்ற கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரே உள்ள "ரேஸ் கோர்ஸ்" வாகனத்தரிப்பிடத்திற்கு அருகாமையில், விசாலமான மர நிழலின் கீழ் வாசிப்பை தூண்டும் விதமாக அமைதியான சூழலில் அமையப்பெற்றுள்ளது.

இந்நூலகத்தை அனைவரும் இலவசமாக பயன்படுத்தலாம். வீதி நூலகம் என்ற திட்டத்தின் கீழ், இந்நூலகத்தில் கட்டிடம் மற்றும் புத்தகங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நூலகம் மற்ற நூலகங்களை விட வித்தியாசமானது. “புத்தகம் ஒன்றை வைத்து விட்டு, புத்தகம் ஒன்றை எடுத்தல் ” என்ற அடிப்படையில் இந்நூலகம் செயல்படும்.

இங்கே நூலகர் என்று யாரும் இல்லை. யாரும் இங்கு வந்து புத்தகங்களைப் படிக்கலாம். மேலும், வாசகர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லும்போது தங்கள் விருப்பப்படி வேறு புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.