தர்கா நகரில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சிறுவன் தாரிக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும்

தர்கா நகரில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சிறுவன் தாரிக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும்

அளுத்கம தர்கா நகரில் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி ஊரடங்கு வேளையின்போது பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 14 வயதான, ஓடிஸம் குறைபாடுடைய சிறுவன் தாரிக் அகமதிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தற்போது வலுப் பெற ஆரம்பித்துள்ளன.

இதற்காக சமூக வலைத்தளங்களில் #JusticeForThariq எனும் 'ஹேஷ்டெக்' பிரபலமடைந்துள்ளதுடன் அரசியல்வாதிகள், பிரபலங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் சிறுவன் தாரிக் அகமதிற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நாளிந்த ஜயதிஸ்ஸ
ஆகியோர் தர்கா நகருக்குச் சென்று பாதிக்கப்பட்ட சிறுவனையும் அவனது குடும்பத்தினரையும் சந்தித்து நடந்த விடயங்களைக் கேட்டறிந்ததுடன் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இச் சம்பவம் தொடர்பில்
முழுமையான விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பிரபல கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, “இது முற்றிலும் அருவருப்பான செயல். இது குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற எந்தவொரு செயலையும் அனுமதிக்கவோ பொறுத்துக்கொள்ளவோ முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் கா ங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இதனை பொலிசாரின் மிலேச்சத்தனமான செயல் எனக் கண்டித்துள்ளதுடன் இது பற்றி விசாரணை நடத்தப்பட வ்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச் சம்பவத்தை கண்டித்துள்ள முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பொலிசாரின் இவ்வாறான மிலேச்சத்தனமான செயல்கள் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஏ.எச்.எம். வஸீர் செய்த முறைப்பாட்டிற்கிணங்க, களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவன் பொலிஸாரினால் தாக்கப்பட்டது மாத்திரமன்றி அது தொடர்பான முறைப்பாட்டை பொறுப்பேற்கவும் பொலிசார் மறுப்புத் தெரிவித்தமை, அச்சுறுத்தியமை ஆகியன தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.

மேலும் சட்ட வைத்திய அதிகாரி சிறுவன் தாரிக் விடயத்தில் இனவாத ரீதியாக தெரிவித்த கருத்துக்களும் விமர்சனத்தைத் தோற்றுவித்துள்ளன. இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் குரலெழுப்பி வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, நடந்த விடயங்கள் தொடர்பான முழு விபரத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

அளுத்கம , தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் கடந்த மாதம் 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தவேளை பொலிஸாரினால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

இதனை சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட இரண்டு கண்காணிப்புக் கமரா காணொளிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சம்பவமானது அளுத்கம பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தாரிக் அஹமட் தனது 4 வயது தொடக்கம் மூளை வளர்ச்சி குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்திய அறிக்கைகள் கூறுகின்றன.

14 வயதினை அடைந்திருந்தாலும் 6 வயது குழந்தைக்குரிய உடலியல் தன்மைகளையே அவர் கொண்டிருந்தார் என அறியப்படுகிறது. கடந்த 25 ம் திகதி ஊரடங்கு வேளை,துவிச்சக்கர வண்டியில் சுற்றித்திரிந்த தாரிக், தர்கா நகரின் அம்பகஹ சந்தியை அடைந்த வேளை, அங்கு காவலரணில் கடமையிலிருந்த பொலிஸார் தடுத்துநிறுத்தினர்.

விஷேட தேவையுடைய இளைஞராக இருந்தமையாலும், சடுதியாகப் பேசக் கூடிய திறனில்லாதவராக இருந்தமையாலும் பொலிஸாரின் கேள்விகளுக்கு அவரால் உடன் பதிலளிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற பொலிஸார், துவிச்சக்கர வண்டியை தள்ளி அவரை வீழ்த்தினர்.

கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியமையால் , சம்பவ இடத்திலிருந்த ஒருவர், இவரது பெயர் தாரிக் அஹமட், இவர் ஒரு விஷேட தேவையுடைய இளைஞர் என்று கூறியதும் (அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்துகொண்டதும்) மிகவும் கடுமையாகவும், ஈவிரக்கமில்லாத வகையிலும் அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அங்கு கடமையிலிருந்த 6 பொலிஸார் மற்றும் வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த 2 சிவிலியன்கள் என சுமார் 8 பேரளவில் தாரிக்கை சரமாரியாகத் தாக்கினர்.

கைகள் இரண்டையும் பின்புறமாகப் பிணைத்து முகம், கைகள், கால்கள், முதுகு என உடம்பின் பல பகுதிகளையும் கொடூரமாகத் தாக்கினர். இத் தாக்குதலால் தலையில் ஒரு வெட்டுக்காயம் உட்பட உடம்பின் பல பகுதிகளிலும் பல காயங்கள் காணப்பட்டன. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தந்தை, கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையிலும், உடல் முழுக்கக் காயங்களுடனும் துடித்துக்கொண்டிருந்த தனது மகனைக் கண்டதும் கதறியழுதார்.

தனது மகன் 14 வயதினை அடைந்திருந்தாலும் சிறு குழந்தைக்குரிய மன நிலையில் இருந்ததால் தனது மகனை ஒரு பூவைப் போலவே பாதுகாத்து வந்திருந்தார். மகனது நிலையைக் கண்டதும் அவரது மனது சுக்குநூறாகியது. தனது மகன் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவர் அவரை விடுவியுங்கள் என்று பொலிஸாரிடம் மன்றாடினார்.

இதை பெரிதுபடுத்தக்கூடாது என்ற அச்சுறுத்தல் எச்சரிக்கையுடன் தாரிக்கை அவனது தந்தையிடம் பொலிஸார் ஒப்படைத்தனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கும் அவர் கொண்டுசெல்லவில்லை. இதனால் தாரிக் மிகவும் மோசமாக பாதிப்படைந்தார்.

தெரிந்தவர்களின் அழுத்தம் காரணமாக தாரிக்கின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றார். ''மனநலம் குன்றிய இளைஞனை வெளியே நடமாட விட்டது உங்களது தவறு...'' என்று குற்றம் சுமத்தி அவரைத் திருப்பியனுப்பினர். அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அங்கும் இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பின்னர், நலன் விரும்பிகளின் உதவியுடன் களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தில் செய்யப்பட முறைப்பாட்டினையடுத்து இளைஞனின் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தாரிக், அவரது தந்தை மற்றும் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தருடன்  சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தாரிக்கை பரிசோதித்த JMO, பொலிஸ் உத்தியோகத்தரிடம் ''அங்கொடைக்கு அனுப்பவேண்டியவனை இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள்...? இவர்களை (முஸ்லீம்) போன்றவர்களால்தான் நாம் அனைவரும் இன்று முகக் கவசம் அணியவேண்டி வந்திருக்கிறது... இவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும்...!'' என்று இனத்துவேச வார்த்தைகளால் திட்டினார்.

பின்னர் அந்த JMO , சிறுவன் தாரிக் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்கிறானா இல்லையா என்று அவர்களிடம் விசாரிக்காமலேயே, ''சில வாரங்களாக மருந்து உட்கொள்ளாத காரணத்தினால் சிகிச்சைக்காக அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு...'' தன்னிச்சையாக அறிக்கையளித்தார்.

அதிர்ஷ்டவசமாக தாரிக்கிற்கு பல வருடங்களாக மருத்துவ சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் அங்கு கடமையிலிருந்தார். தாரிக் தொடர்ச்சியாக மருந்துகளை உபயோகிப்பவர் என்று அவருக்கு தெரியுமாதலால், வழக்கமான மருந்துகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

இந்தச் சம்பவத்தினை பொலிஸார் இயன்றளவு மூடிமறைக்க முயன்றாலும், கண்காணிப்புக் கமரா காணொளிகள் மூலமாக உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட்டது. அண்மைக் காலமாக பொலிஸாரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது.

ஊரடங்கு அமுலில் இருந்தபோது மீறியவர்களை பொலிஸார் கொடூரமாகத் தாக்கிய சம்பவங்கள் பலவற்றினையும் நாம் அறிகிறோம். இவ்வாறு இனம், மதம் என்ற வேறுபாடுகளினை அடிப்படையாக வைத்து அநியாயமிழைக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இருக்கிறார்கள்.

இனவாத விசக் கருத்துக்களை விதைக்கும் இவ்வாறான JMO போன்றவர்களின் அநாகரிக செயற்பாடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும் என அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.