SJB இன் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் முஷாரப்

SJB இன் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் முஷாரப்

பிரதான எதிர்க்கட்சியான SJB என்று அழைக்கப்படும் சமகி ஜன பலவேகயவின் இன்றைய பாராளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

20ஆவது திருத்தச் சட்ட மூலம் நேற்று பாராளுன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஆராயும் முகமாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற குழு இன்று (23) வெள்ளிக்கிழமை கூடியது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சமகி ஜன பலவேகய மற்றும் அதன் பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

எனினும், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த குறித்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இதற்கு சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன் அவரை கூட்ட மண்டபத்திலிருந்து வெளியேறுமாறும் வேண்டியுள்ளனர்.

"20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்தே வாக்களித்தேன்" என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இதன்போது தெரிவித்துள்ளார்.

"20ஐ எதிர்த்தீர்கள்; ஆனால் இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். இதனால் இன்றைய கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது" என சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்கள பதலளித்துடன் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபினை கூட்ட மண்டபத்திலிருந்தும் வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.