முஸ்லிம் காங்கிரஸில் இணையமாட்டேன்; தேர்தலில் நடுநிலை வகிப்பேன்: நௌசாத்

முஸ்லிம் காங்கிரஸில் இணையமாட்டேன்; தேர்தலில் நடுநிலை வகிப்பேன்: நௌசாத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் எதுவும் தனக்கில்லை. எனினும் இந்த தேர்தலில் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் தெரிவித்தார்.

தவிசாளர் நௌசாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளமை தொடர்பான விசேட சந்திப்பொன்று நேற்று (04) சனிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபையின் மேயர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக விடியல் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பு தொடர்பில் தவிசாளர் நௌசாத் மேலும் தெரிவிக்கையில்,

"முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை நேற்று இரவு கல்முனையில் சந்தித்தது உண்மை. அந்த சந்திப்பானது கட்சி மாறலுக்கான எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை.

திகாமடுல்ல மாவட்டத்தில் எவ்வாறு இம்முறை தேர்தலை வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். நானும் குறித்த கூட்டத்தை புறக்கணிக்காமல் பங்கேற்றேன். இதில் அவர்கள் கட்சி அரசியலும் பேசப்பட்டது. நடந்தது இவ்வளவுதான்.

அதற்காக நான் மு.காவில் உத்தியோகபூர்வமாக இணைந்ததாக அர்த்தமில்லை. எனக்கு கட்சி தேவையில்லை. நான் இம்முறை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன்.

தற்போதும் கூட கட்சியில் இணைவதென்றால் அக்கட்சியின் தலைவருடன் தான் பேசியிருக்க வேண்டும். மாறாக பிராந்தியத்திலுள்ள அரசியல்வாதிகளுடன் பேசி பலனில்லை.

வெறுமெனே ஒரு சந்திப்பினால் கட்சியில் இணைந்ததாக அர்தமில்லை. எது எப்படியோ, நான் தெளிவாக கூறுகின்றேன் மு.கா.வுடன் நான் (நௌஷாட்) இணையவில்லை. இம்முறை தேர்தலில் நான் நடுநிலையாக இருப்பேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி:

மு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்?