உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜம்இய்யதுல் உலமாவிற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜம்இய்யதுல் உலமாவிற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம்

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமது அமைப்பினை தொடர்புபடுத்தி போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.

"இந்த குண்டுத் தாக்குதலுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஒத்துழைப்பு வழங்கியதாக இந்த பாராளுமன்ற தேர்தல் காலப் பகுதியில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இந்த போலிக் குற்றச்சாட்டுகளை முழுமையான நிராகரிப்பதாக" அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் தெரிவித்தார்.

தமது அமைப்பு ஒருபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறித்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்த அமைப்பென்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த போலிப் பிரசாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பெயரை மாசுபடுத்தும் வகையில் பல பிழையான தகவல்களை மக்கள் மயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரல் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஏனைய சில விடயங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை பிழையாக தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

பொறுப்பற்ற இச்செயற்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் பிழையான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.