தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை: சஜித்

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இடமில்லை என அக்கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் தலமையகத்தில் நேற்று (08) சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"நாட்டின் அரசியல் வரலாற்றில் பாரிய அரசியல் புரட்சிக்கு வித்திட்டு 2,771,990 வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த மக்கள் ஆணையுடன் நாட்டின் வரலாற்றில் பாரிய ஜனநாயகப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைத்து கல் எறிந்த போது எம்மால் பலமான பயணமொன்றை ஆரம்பிக்க முடிந்தது.

பொய்யை தோல்வியடைச் செய்து உண்மையை எம்மால் வெற்றி பெறச் செய்ய முடிந்தது. குறுகிய காலத்திற்குள் நாம் இவ்வாறு மக்கள் பலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே, எமக்கு சிறந்த எதிர்காலப் பயணம் உள்ளதாக நான் நினைக்கின்றேன்.

அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு உறுதியான பயணத்தை தொடரவுள்ளோம். கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் உள்வாங்கப் போவதில்லை" என்றார்.