ஜனாதிபதி தேர்தலால் திசை மாறும் சாய்ந்தமருது பள்ளிவாசலின் போராட்டம்

ஜனாதிபதி தேர்தலால் திசை மாறும் சாய்ந்தமருது பள்ளிவாசலின் போராட்டம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மூப்பத்தைந்து பேர் போட்டியிடும் இந்த தேர்தலிற்கான பிரசார நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. எனினும் சமயத் தளங்களில் எந்தவிதமான தேர்தல் பிரசாரங்களையும் மேற்கொள்ள முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் அறிவிப்பு

இந்த நிலையில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரித்து சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசலின் ஆதரவுடன் செயற்படும் கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் ரோசன் என்று அழைக்கப்படும் அப்துல் மஜீதினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சாய்ந்தமருதிற்கான நகர சபை நிச்சயம் வழங்கப்படும் என  பள்ளிவாசல் செயலாளர் இந்த கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்துடன் இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திட்டப்பட்டுள்ளது என்றார்.

இந்த அறிவிப்பினை அடுத்து சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைமையின் கீழ் சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையினை முன்னெடுத்து வந்த குழுவினர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் ஆகிய தரப்பினர் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையினை வலுவிலந்துவிடுமா என்ற அச்சத்தில் அப்பிரதேச மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்ற போராட்டம்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஒரு தசாப்பத்தற்கு மேலாக முன்வைக்கப்பட்டு வருகின்றனது.

கல்முனை மேயராக செயற்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தினைச் சேர்ந்த கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடமிருந்து 2013ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் குறித்த பதவி பறித்தெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் 2015ஆம் ஆண்டு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் தலைமையின் கீழ் தனியான உள்ளூராட்சி மன்ற போரட்டம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சுமார் 50க்கு மேற்பட்ட கூட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் சாய்ந்தமருது மக்கள் அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்து.

இந்த செயற்பாட்டிற்கு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா சபை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம், பிரதேச புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் என அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்கியதுடன் தோடம் பழச் சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்கி 13,239 வாக்குகளை பெற்று ஒன்பது ஆசனங்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுடன் சுயேட்சை குழு மாநகர சபை உறுப்பினர்களும் இணைந்து இந்த கோரிக்கையினை முன்னெடுத்து வந்தனர். எனினும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியாக நகர சபை வழங்குவது தொடர்பில் எந்தவித சமிஞ்சையும் அரசாங்கத்தினால் காட்டப்படவில்லை.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் - மஹிந்த சந்திப்பு

இவ்வாறான நிலையில் கடந்த ஒக்டோபர் 21ஆம் திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சாய்ந்தமருது பெரிய பள்ளிசால் நிர்வாகத்திற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று ஹம்பாந்தோட்டை, தங்காலையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் முன்வைக்கப்பட்ட சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையினை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதுடன், இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் வழங்குவதாக உறுதியளித்தார்.

எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது என்ற சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் கோரிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் - பஸில் சந்திப்பு

இதே தினம் பிற்பகல், பத்தரமுல்லை – நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவிற்கும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் சாய்ந்தமருதிற்கு தனியான நகர சபை வழங்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கல்முனை மாநகர சபையின் தோடம்பழ சுயேட்சை குழு உறுப்பினர்கள் ஆறு பேருக்கும் இடையில் ஒப்பந்தமொன்று இதன்போது கைச்சாத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பகிரங்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்குள் முரண்பாடு

இந்த அறிவிப்பு - சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் செயலாளரின் தனிப்பட்ட அறிவிப்பே தவிர, ள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையின் ஒரு தொகுதியினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலின் சாய்ந்தமருது இல்லத்தில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மரைக்காயர் சபை (நிர்வாக சபை) உறுப்பினர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என்பதை கலந்துரையாடலில் ஈடுபட்ட மரைக்காயர் சபை உறுப்பினர்கள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர்  அப்துல் மஜீதின் கருத்தினை பெறுவதற்காக இந்த பத்திரிகை அச்சுக்கு செல்லும் வரை பல தடவைகள் அவரை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்த போது, அது பலனளிக்கவில்லை.

சாய்ந்தமருது எழுச்சி போராட்டம் மழுங்கடிப்பு

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தீர்மானித்தமை மோசமான கலாசாரமொன்றினை நோக்கி சமூகத்தினை வழிநடத்திச் செல்கின்றது என சட்டத்தரணி எம்.என்.எம்.முஜீப் தெரிவித்தார்.

இது ஜனாதிபதித் தேர்தல் என்பதனால் இந்தத் தேர்தலில் எமது ஊர், பள்ளிவாசலின் தலைமையில் நடுநிலை வகிப்பதே சிறந்ததாகும் என அவர் குறிப்பிட்டார்.

"சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலினை வெளியிடும் கட்சிக்கே ஆதரவு வழங்குவது என்பது எமது தெளிவான முடிவாகும். எனினும் குறித்த விடயம் தொடர்பான வர்த்தமானி பிரகடணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனன் மூலம் சாய்ந்தமருது எழுச்சி போராட்டம் மழுங்கடிக்கச் செய்யப்பட்டுள்ளது" என சட்டத்தரணி கூறினார்.

சாய்ந்தமருது எழுச்சி போராட்டத்தின் போது பிரகடணத்தினை வரைவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக செயற்பட்ட சட்டத்தரணி முஜீப், குறித்த போராட்டத்திற்கு சட்டத் துறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மறைமுக ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

"சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஜனாதபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரிடம் எழுத்து வேண்டுகோள் விடுத்தோம்.

எனினும் இந்த வேண்டுகோளிற்கு கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினரிடமிருந்து மாத்திரமே பதில் வந்தது" என சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் ஆதரவுடன் செயற்படும் கல்முனை மாநகர சபையின் தோடம்பழ சுயேட்சை குழுவின் தலைவரான எம்.ஏ.றபீக் தெரிவித்தார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது, அவரிடம் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையினை மாத்திரமே முன்வைத்தது புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

"சாய்ந்தமருதுக்கு நகர சபை கிடைக்கும் வரை அரசியல்வாதிகளை நாடுவதில்லை என பள்ளிவாசலில் நாங்கள் மேற்கொண்ட பையத்தினையும் மீறி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தோம். எனினும் முஸ்லிம் கட்சிகள் எம்மையும் எமது ஊரையும் ஏமாற்றிவிட்டன" என மாநகர சபை உறுப்பினர் மேலும் கூறினார்.

அமைச்சர் ஹக்கீமின் நிலைப்பாடு

இதேவேளை, நகர சபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும் என ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

"சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக தனித்துப் போட்டியிட்டது. அதற்கு மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன் மூலம் கல்முனையில் ஏற்பட்ட சரிவை கட்சி தாங்கிக்கொள்ளும்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை சாய்ந்தமருதுக்கு கூட்டிவந்து விரோத சக்திகளுக்கு துணைபோனமை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் செயலாகும். அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது" என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

வக்பு சபையில் மனு

இதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவிற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நேரடி ஆதரவு வழங்கியது என்ற குற்றாச்சாட்டின் கீழ் அதன் நிர்வாக சபை கலைக்கப்பட்;டு இடைக்கால நிர்வாக சபையொன்று வக்பு சபையினால் அக்கால கட்டத்தில் நியமிக்கப்பட்டது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு எதிராக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் வக்பு நியாயாதிக்க சபையில் செய்யப்பட்ட மனுத் தாக்கலின் போது, வக்பு சபையின் தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டது.

எனினும் குறித்த மனு மீதான விசாரணைகள் தொடர்ந்தும் வக்பு சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மனு மீதான விசாரணையின் அமர்வுகள் கடந்த ஓக்டோபர் 29ஆம் மற்றும் நவம்பர் 5ஆம் ஆகிய தினங்களில் இடம்பெற்றது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.

இதன்போது, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளினால் தெரிவிக்கப்பட்டது என்ற பணிப்பாளர் இது தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் கண்காணிப்பகத்தின் நிலைப்பாடு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடாகும் என தேர்தல் வன்முறைகளுக்கான கண்கானிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பாளரான மன்சுல கஜநாயக்க தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சமயத் தலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியாது. அதனையும் மீறி பிரசாரம் இடம்பெற்றால், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் தேர்தல் காலங்களில் கோரிக்கைகளை முன்வைக்கலாம். எனினும் பள்ளிவாசல் உள்ளிட்ட மதஸ்தலங்கள் சார்பில் எந்தவித கோரிக்கையினையும் தேர்தல் காலத்தில் மேற்கொள்ள முடியாது எனவும் மன்சுல கஜநாயக்க கூறினார்.

இதற்கு மேலதிகமாக சமயத் தலைவர்கள் தேர்தல் காலப் பகுதியில் எந்தவித அரசியல் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுடன் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

"இதனையும் மீறி தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கலந்துகொள்கின்ற பள்ளிவாசல் நிர்வாகத்தினரை தேர்தல் ஆணைக்குழுவினால் பதவி விலக்க முடியும். சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது குறித்து தேர்தல் வன்முறைகளுக்கான கண்கானிப்பு நிலையத்திற்கு இதுவரை எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை" என அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் மன்சுல கஜநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் தேர்தல் சட்டவிதிகள் மீறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதால், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் கூறினார்.

பள்ளிவாசல்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகிறோம். இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும். அதேபோன்று, வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஜும்ஆ பிரசங்கத்தின் போதும் ஏனைய நிகழ்வுகளின் போதும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து தெரிவிப்பதும் தர்தல் சட்டவிதிகளை மீறும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிகழ்வுகளை கஃபே அமைப்பின் பிரதேச இணைப்பாளர்கள் கண்காணிப்புச் செய்து ஆதாரங்களைச் சமர்ப்பிப்பார்கள். எமது கண்காணிப்பாளர்கள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்ய முடியாதுள்ளதால் பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளை எமது அமைப்புக்கு முறையிடலாம் என கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என அனைத்து இன மக்களும் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான நிலையில் ஊரை வழிநடாத்த வேண்டிய பெரிய பள்ளிவாசல், அனைத்து மக்களினது கருத்திற்கு கட்டுப்பட வேண்டிய பொறுப்புள்ளது.

இவ்வாறான நிலையில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் இந்த விடயத்தில் பாரிய தவறிழைத்துள்ளதுடன் குறுநில மன்னர்களின் எதிர்கால நலனுக்காக மேற்கொண்ட இந்த தீர்மானம், சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் தாகமான தனியா உள்ளூராட்சி மன்றம் என்ற விடயத்தில் எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தப் போகின்றது என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.  

-றிப்தி அலி-