சீனாவின் நிதியுதவியில் ஹம்பாந்தோட்டையில் பல்கலைக்கழகம்

சீனாவின் நிதியுதவியில் ஹம்பாந்தோட்டையில் பல்கலைக்கழகம்

இலங்கையின் தொழில்மயமாக்கலை விரிவுபடுத்துவதற்காக, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு உதவ வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சியின் இலங்கைக்கான அண்மைய உயர்மட்ட வருகையின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட யெங், இத்திட்டத்தை சீனா தீவிரமாக ஆய்வு செய்யும் என்றும் உறுதியளித்தார்.  

இதேவேளை, சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வி மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு தொடர்பாக ஆழமான கலந்துரையாடலொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யெங் ஜியேச்சியின் இலங்கைக்கான அண்மைய உயர்மட்ட வருகையின் போதே இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் - 19 நெருக்கடிக்குப் பின்னர், இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த புலனாக இருக்கும் என்பதால், இரு தரப்பிரும் இதற்கு முன்னுரிமை அளித்தனர்.

இருதரப்புக்கான கல்விப் பரிமாற்றங்களுக்கான ஓர் ஆரம்பக் கட்டமைப்பை வகுத்துக்கொள்வதற்காக, இரண்டு அரசாங்கங்களும் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என இதன்போது யெங் பரிந்துரைத்தார்.

இலங்கையில் சீன மொழிக்கு பாரிய கேள்வி காணப்படும் நிலையில் சர்வதேச சீன மொழி ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்குவதன் மூலமும், சீன மொழி மையங்களைக் கூட்டாக நிறுவுவதன் மூலமும் மொழி கற்பித்தல் தொடர்பான இலங்கையுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சீனா தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சி ஒத்துழைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக சீனாவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் 7,000 அரசாங்க ஊழியர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் சீனாவில் நடைபெறும் அனைத்துவிதமான பயிற்சிகளுக்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர, இந்தக்  கொவிட் - 19 நெருக்கடியின் போதும், வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழும் இணையத்தள மற்றும் இணையத்தளமல்லாத பயிற்சி வாய்ப்புகளையும் சீனா வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.