சம்பளத்தில் அரைவாசியை கொவிட் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ள இராஜாங்க அமைச்சர்

சம்பளத்தில் அரைவாசியை கொவிட் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ள இராஜாங்க அமைச்சர்

தனது இந்த மாத சம்பளத்தில் அரைவாசியை கொவிட் நிதியத்துக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பல நெருக்கடிகளின் போது இந்நாட்டு மக்கள் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். எனவே, அதன் ஆரம்பமாக தான் இந்தப் பணியை ஆரம்பித்து வைக்கவுள்ளேன் என்றார்.

“பொருளாதார நெருக்கடி, சுகாதார நெருக்கடி, சமூக நெருக்கடி என அனைத்தும் நெருக்கடியில் பயணிக்கின்றன. இந்த நிலைக்குப் பொறுப்பானவர்கள் யார்? சந்தேகநபர் யாரென்று எம்மால் கூற முடியாது” என தெரிவித்த அவர், “ஆனால், அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறோம்” என்றார்.

மாலை நேரங்களில் செய்திகளைப் பார்க்கும் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தத் துயரச் சம்பவங்கள் குறித்து விமர்சிப்பதாகத் தெரிவித்த அவர், ஆனால் இந்த துயரங்களுக்கு உதவிகள் அல்லது நன்கொடைகளை வழங்கி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்க எவரும் முன்வருவதில்லை என்றார்.

எனவே, நாம் ஆலோசகர்கள், விமர்சகர்களாக மாத்திரம் இருந்துகொண்டு இந்தப் பிரச்சினை குறித்து ஆராயாமல், இந்தப் பிரச்சினைகளின் பங்குதாரர் என்ற ரீதியில் இவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்றார்.