ஜனாஸா எரிப்பிற்கு எதிராக அலி ஸாஹிர் மௌலானா மனுத் தாக்கல்

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக அலி ஸாஹிர் மௌலானா மனுத் தாக்கல்

Covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை, சர்வதேச வழிமுறைகளையும், சமய விழுமியங்களையும் தாண்டி சுகாதார அமைச்சின் வர்த்தமானிக்கு அமைவாக எரியூட்டப்படுவதற்கு எதிராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிநடாத்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான நிசாம் காரியப்பரின் நெறிப்படுத்தலின் கீழ் சட்டத்தரணி எம்.ஐ. ஐனுல்லாஹ்வினால் குறித்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 17ஆவது மற்றும் , 126ஆவது ஷரத்துக்களின் பிரகாரம் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜெயசிங்க , சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா ஆகியோரை பிரதிவாதிகளாக கொண்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ் அசாதாரண சூழலில் நோய் தொற்று உறுதியானவர்களதும், உறுதி செய்யாதவர்களதும் சடலங்களை எரிப்பது தொடர்பில் பின்பற்றப்படும் இறுக்கமான நடைமுறைகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவினால் மேற்கொள்ளப்படும் கள நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே குறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.