கொவிட்க்கு பின்னர், சீனச் சுற்றுலாப் பயணிகளின் முதல் இடமாக இலங்கை இருக்கும்

கொவிட்க்கு பின்னர், சீனச் சுற்றுலாப் பயணிகளின் முதல் இடமாக இலங்கை இருக்கும்

   கொவிட் - 19க்குப் பின்னர், சீனச் சுற்றுலாப் பயணிகளின் முதல் இடமாக இலங்கை இருக்கும் என முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி தெரிவித்தார்.

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சியின் இலங்கைக்கான சமீபத்திய உயர்மட்ட வருகையின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கொவிட் - 19 நெருக்கடிக்குப் பின்னர், இலங்கைக்கு சீன சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதை ஊக்குவிக்குமாறு இலங்கைத் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதன் பிரகாரம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா ஒத்துழைப்புக்கு சீனத் தலைவர்களும், அரசாங்கமும் அதிக முக்கியத்துவம் தருவதாக சீனாவின் சிரேஷ்ட அதிகாரிகள இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் உறுதியளித்தனர்.

இந்தக் கோரிக்கையை சீனா தீவிரமாகப் பரிசீலிக்கும் என்றும், இது இலங்கையின் மிகவும் முக்கியமான தேவை என்பதை சீனா புரிந்துகொண்டுள்ளது என்றும் யெங் தெரிவித்தார்.
கொவிட் - 19 நெருக்கடிக்கு இடையில், இரு நாடுகளும் சர்வதேசப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் சரியான சுகாதார நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

எங்கள் இரு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா அதிகாரிகளும், செயற்பாட்டாளர்களும் இருதரப்பு அல்லது பிராந்திய ரீதியில் பயணக் குமிழியை எவ்வாறு அமைப்பது என்பது குறித்தும் மேலும் கலந்துரையாட வேண்டும்.

சீனா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் இந்தத் தொற்று நோய் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைக் கருத்திற்கொண்டு சீனாவில் இருந்து வெளிச்செல்லும் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சீனாவின் சுற்றுலாப் பயணிகளின் முதல் தெரிவில், இலங்கை இருப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உண்டு.

இலங்கைக்கு வந்தபோதான நல்ல நினைவுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்திய யெங் ஜியேச்சி, '1981ஆம் ஆண்டு சீனத் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுவாங் ஹுவாவுடன் இலங்கைக்கு முதன் முதலில் நான் சென்றபோது, எயார் லங்கா விமானத்தின் ஜன்னல் வழியாக நீலக்கடலில், அழகான பச்சைக்கு மத்தியில் இருந்த 'இரத்தினக் கல்' இன் அழகைக் கண்டு வியப்படைந்தேன். சீனாவில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை நிச்சயமாக பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது' என்றார்.

2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு 260,000 சீன சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். எனினும், 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் அது 167,000ஆகப் பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், சீனாவிலிருந்து மொத்தமாக 2019ஆம் ஆண்டில் 169.21 மில்லியன் வெளிச்செல்லும் பயணங்கள் சீன சுற்றுலாப் பயணிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது முந்தைய ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 2020 பெப்ரவரியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.