அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்; 21, 22 இல் விவாதம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்; 21, 22 இல் விவாதம்

   அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம், 22ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இன்று (16) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் 20வது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஒக்டோபர் 21ஆம்  மற்றும் 22ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஒக்டோபர் 22ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும்.

இந்த இரண்டு தினங்களும் பாராளுமன்ற ஆரம்பத்தின் போது இடம்பெறும் வாய்மூல விடைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகள் இடம்பெறாது என்பதுடன், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்படாது.

அதேநேரம், ஒக்டோபர் 20ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

மறைந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர் சுரங்கனி எல்லாவல, அமரர் ஆர்.ஆர்.டபிள்யூ. ராஜபக்ஷ, அமரர் கே.பி.சில்வா ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முன்வைக்கப்படும்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பர்னாந்து, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அலஹப்பெரும, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, கயந்த கருணாதிலக, அநுரகுமார திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், டிலான் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.