புதிய இராஜதந்திரிகளுக்கான  செயலமர்வு 

புதிய இராஜதந்திரிகளுக்கான  செயலமர்வு 

புதிதாக நியமிக்கப்பட்ட பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களுக்கான இரண்டு வார கால நோக்குநிலை செயற்றிட்டமொன்றை வெளிநாட்டு செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு அமைச்சின் கொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள அபிவிருத்திப் பிரிவு வெற்றிகரமாக நடாத்தியது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரின் முன்னிலையில் 2020 அக்டோபர் 05 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து இந்த நிகழ்ச்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், சீனா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், கென்யா, அமெரிக்காவுக்கான பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களும், நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பெயரளிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பிரதிநிதியும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொற்றுநோய் மிகுந்த சூழ்நிலையின் காரணமாக முக்கியமாக மெய்நிகர் இணையவழி மேடையில் நடாத்தப்பட்ட இந்த நோக்குநிலை செயற்றிட்டமானது, 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' எனும் ஜனாதிபதியின் நோக்கு மற்றும் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் சுருக்கமொன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.  ஒரு வலுவான பொருளாதார உந்துதலுக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, இந்த செயற்றிட்டமானது இலங்கையின் இருதரப்பு, பல்தரப்பு ஈடுபாடுகள், காவல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொது இராஜதந்திரம், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள், உபசரணை மற்றும் கொன்சுலர் விவகாரங்கள், கோவிட் தொடர்பான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்த அறிவையும், புரிதலையும் மேம்படுத்தும் அதே வேளையில், பொருளாதார இராஜதந்திரத்தில் அதிக கவனம் செலுத்தியது.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இலங்கை தேயிலை சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம், முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வணிகத் திணைக்களம் போன்ற தூதரக செயற்பாடுகள் தொடர்பான முக்கிய பங்குதாரர்களின் சுருக்கமான விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளடக்கப்பட்டன.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னேற்றங்கள் குறித்து பெயரளிக்கப்பட்டுள்ள தூதரகத் தலைவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், இந்த செயற்றிட்டத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை, இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த விளக்கங்கள் மற்றும் குழுவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பெயரளிக்கப்பட்டுள்ள தூதரகத் தலைவர்கள் உரிய தலைநகரங்களில் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர்