ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தப்பட்டாரா?

ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தப்பட்டாரா?

முன்னாள் சுகாதார அமைச்சரும் ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தப்பட்டார் என்று வெளியான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என சுகாதார துறை வட்டாரங்கள் 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன கடந்த வார இறுதியில் தனது குடும்பத்தினருடன் பொத்துவில், அறுகம்பே பிரதேசத்திற்கு சுற்றுல்லா மேற்கொண்டுள்ளார்.

"இதன்போது அவரும், அவருடைய குடும்பத்தினரும் தங்கியிருந்த ஹோட்டேலில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக" பிராந்திய இணையத்தளமொன்று நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்தினவும் அவரது குடும்பத்தினரும் பொத்துவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து சுற்றுலா நிமித்தம்  கிழக்கிற்கு வந்த இவர்கள் பொத்துவிலிலுள்ள விடுதியில் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பிரதேச சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற சுகாதார பிரிவினர் விடுதியை  தனிமைப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட விடுதியில் 40 அறைகளில் விருந்தினர்கள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இணையத்தளத்தில் எந்தவித sourceஉம் இன்றி வெளியாகிய இந்த செய்தியினை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களில் பலர் பகிர்ந்தமையினால் அது வைரலாக மாறியது.

எனினும், பொத்துவில் பிரதேசத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும் ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தப்பட்டார் என சமூக ஊடங்களில் வெளியாகிய செய்தியினை கிழக்கு மாகாண சுகாதார துறையினர் நிராகரித்தனர்.

"அத்துடன் அரசாங்கத்தின் ஒழுங்குமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினை தனிமைப்படுத்துவதற்கான எந்த காரணங்களுமில்லை" என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான டாக்டர் ஜீ.சுகுனண் 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, "மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, பொத்துவிலுக்கு வந்துவிட்டார்" என பொத்துவில் பிரதேச சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

"அரசாங்கத்தின் ஒழுங்குமுறைகளுக்கு அமைய ஒக்டோபர் 28, 29ஆகிய திகதிகளில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன்னரே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து வெளியேறியமையினால் அவரை தனிமைப்படுத்த முடியாது" என பிரதேச சுகாதார துறையினர் குறிப்பிட்டனர்.