'வெளி மாவட்டங்களிலிருந்து கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவர்'

'வெளி  மாவட்டங்களிலிருந்து கல்முனை சுகாதார  மாவட்டத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவர்'

பாறுக் ஷிஹான்

வெளி  மாவட்டமொன்றிலிருந்து கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன்  தெரிவித்தார்.

சுகாதார மாவட்டத்தில் கொரோனா  பரவல் தொடர்பில்    இன்று (2) மாலை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"மினுவாங்கொட  ஆடை தொழிற்சாலை பெலியகொட மீன் சந்தை தொடர்பில் இதுவரை கல்முனை சுகாதார மாவட்டத்தில் 17 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை மருதமுனை -2, கல்முனை -3, சாய்ந்தமருது -1, அக்கரைப்பற்று -1, இறக்காமம்- 3, பொத்துவில் - 7 பேர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட வேண்டும்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில்  பொதுமக்கள் முகக்கவசம்  சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகை தந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ் அல்லது பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ளுமாறும் இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்" என்றார்.