பிரதமரினால் முன்னாள் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தினை பகிஷ்ரிக்க ஜே.வி.பி தீர்மானம்

பிரதமரினால் முன்னாள் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தினை பகிஷ்ரிக்க ஜே.வி.பி தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட்டத்தினை பகிஷ்ரிக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி இன்று (01) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மே 04ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கூட்டம் தொடர்பில் அக்கட்சியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அத்துடன் அவசரகால நிலையில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்;றத்தை ஜனாதிபதி மீள கூட்டுதல் அல்லது இவ்வாறான நிலையில் மேற்கொள்ளக்கூடிய அரசியலமைப்புக்கு அமைவான செயற்பாடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனுர குமார திசாநாயக்கவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதம்:

பிரதமர்,
பிரதமர் செயலகம்,
கொழும்பு 02

கௌரவ பிரதமர் அவர்களே,

பிரதமரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்:

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான 2020 மே 04 திகதி மு.ப 10 மணிக்கு பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் பங்குபற்றுமாறு எனக்கும், எமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்துக்கு 225 முன்னாள் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா பெருந்தொற்றை தோற்கடிப்பதற்காகவும், அதனோடிணைந்த மக்கள் வாழ்க்கையில் நிலவும் சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்காகவும் கட்சி என்ற வகையில் நாம் எமது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளோம். எதிர்காலத்திலும் வழங்குவோம்.

கொரோனா தொற்றை தோற்கடிப்பதற்கும், தற்போதுள்ள நிலை தொடர்பில் கருத்து கேட்பதற்குமாக அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுவதற்கு மாறாக, 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து கலந்துரையாடுவது பயனுள்ளது என நாம் கருதவில்லை.

குறிப்பாக இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுப்பதற்காக பொதுவான பொறிமுறையை உருவாக்குமாறு எமது கட்சி உள்ளிட்ட பெரும்பாலானோர் கோரியுள்ள வேளையில் அதனை செய்வதற்கு கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இவ்வாறு அனைத்து முன்னாள் உறுப்பினர்களின் சந்திப்பு பயனற்றது என்பதே எமது கருத்தாகும்.

கொரோனா அனர்த்தத்துக்கு முகங்கொடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பில் கலந்துரையாடுவதாயின், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து அந்த விடயம் தொடர்பில் அவர்களது ஒத்துழைப்பை பெறுதலே சிறந்தது என கருதுகிறோம்.

இதற்கு முன்னர் பிரதமர் என்ற வகையில் உங்களது தலைமையில் கூட்டப்பட்ட கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எமது கட்சி பங்கேற்றது என்பதனையும், அதன்போது எமது கட்சியின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்ததையும் குறிப்பிடுகிறோம்.

ஏப்ரல் 30 திகதியின் பின்னர் அரச நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் இல்லை எனும் கருத்து மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதத்தினுள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படாமை காரணமாக தோன்றும் அரசியலமைப்பு ரீதியான குழப்பநிலை தொடர்பிலும் தற்போது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மேற்படி பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தால் அவ்வாறான கலந்துரையாடலில் அரசியலமைப்பு ரீதியான சிக்கலுக்கு தீர்வை பெற முடியாது.

எனவே, இந்த இந்த கூட்டம் மேற்படி பிரச்சனை தொடர்பாக கூட்டப்பட்டால், அதற்காக மேற்கொள்ளவேண்டிய சரியான வழிமுறையானது,

01. ஜனாதிபதி அவர்கள் அவசரகால நிலையில் பாராளுமன்றத்தை மீள கூட்டுதல்.
அல்லது

02. இவ்வாறான நிலையில் மேற்கொள்ளக்கூடிய அரசியலமைப்புக்கு அமைவான செயற்பாடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிதல்.

என நாம் உறுதியாக நம்புகிறோம்.

அவ்வாறன்றி அரசியலமைப்புக்கு அமைய செயற்படாமையினால் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடி தொடர்பில் முன்னாள் உறுப்பினர்களை தெளிவூட்டுதல் பயனற்றது என நாம் கருதுவதனால் மே 04 திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட்டத்தில் நான் உள்ளிட்ட எமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பங்குபற்ற மாட்டோம் என இத்தால் தெரிவிக்கிறோம்.

இவ்வண்ணம்,
நம்பிக்கையுள்ள,

அநுர திஸாநாயக்க (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
கட்சி தலைவர் - மக்கள் விடுதலை முன்னணி
2020.05.01