பொத்துவில் வைத்தியசாலை தாதியர்கள் உட்பட 13 பேர் சுய தனிமைப்படுத்தல்

பொத்துவில் வைத்தியசாலை தாதியர்கள் உட்பட 13 பேர் சுய தனிமைப்படுத்தல்

எம்.எஸ்.சம்சுல் ஹுதா

வெலிசறை கடற்படை முகாம் மற்றும் கடற்படை தலமை அலுவலகத்தில் கடமையாற்றிய மூன்று கடற்படை வீரர்கள் விடுமுறை காரணமாக தங்களது சொந்தப் பிரதேசங்களான பாணமை மற்றும் பொத்துவில், சிங்கப்புர ஆகிய பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர்.

வெலிசறை கடற்படை முகாம் பகுதியில் உள்ள கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையைத் தொடரந்து குறித்த கடற்படை வீரர்களை பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசாரணையின் போது ஒரு கடற்படை வீரர் பொத்துவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மூவருடனும் ஒரு ஆட்டோ சாரதியுடனும் நேரடித் தொடர்பை வைத்துள்ளார்.

இதற்கமையே குறித்த கடற்படை வீரர் உட்பட ஐந்து பேர் அவரவர் குடும்பத்துடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மற்றுமொரு கடற்படை வீரரது மனைவி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேலை குறித்த கடற்படை வீரர் வைத்தியசாலைக்கு வந்ததுடன் அங்கு கடமையிலிருந்த தாதியர்களுடனும் தொடர்பினை வைத்துள்ளார்.

தற்போது அவரது குடும்பம் மற்றும் வைத்தியசாலையின் ஆறு தாதிய உத்தியோகத்தர்களுமாக ஏழுபேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொத்துவில், சிங்கபுர பகுதியில் மற்றுமொரு கடற்படை வீரரும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கட்டாரிலிருந்து ஓமான் விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பொத்துவிலைச் சேர்ந்த ஒருவர் பதுளை தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டு நீர்கொழும்பு தொற்றுநோய்ப் பிரிவு வைத்தியசாலைக்கு (IDH) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.