RTI ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத 8 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

RTI ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத 8 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத எட்டு அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு, களனி பல்கலைக்கழகம், கல்வி அமைச்சு, றோயல் கல்லூரி, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தொழிற்கல்வி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், புகையிரத திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு எதிராகவே தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி நிறுவனங்களின் தகவல் அதிகாரிகளும் இந்த வழக்குகளில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமையினால் அவர்கள் தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத மேலும் பல அரச நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த ஒரிரு மாதங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத பொது அதிகார சபைக்கும், அதன் தகவல் அதிகாரிக்கும் எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர முடியும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.