சிறு வர்த்தகங்களுக்கு உதவியளிக்கவும் பெண்களை வலுவூட்டவும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

சிறு வர்த்தகங்களுக்கு உதவியளிக்கவும் பெண்களை  வலுவூட்டவும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

தொற்றுநோய் ஏற்படுத்திய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு இலங்கையில் உள்ள சிறு வர்த்தகங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் அவற்றிற்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவியளித்து வருகிறது.

ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனமானது (DFC) உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறையை முன்னேற்றுவற்கும், தனியார்துறை முதலீட்டை வலுப்படுத்துவதற்கும், பெண் தொழில்முனைவோருக்கு உதவியளிப்பதற்கும் இலங்கையின் DFCC வங்கிக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிப்பினை வழங்கியுள்ளது.

இது இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய DFC கடன் வழங்கலாக இருப்பதுடன்  இதற்குமுன்னர் NDB வங்கிக்கு வழங்கப்பட்ட 75 மில்லியன் அமெரிக்க டொலர் DFC நிதியளிப்பு வரிசையின் தொடராக இது அமைகிறது.

இக்கடனின் ஒரு பகுதி இலங்கைப் பெண்களுக்குச் சொந்தமான அல்லது அவர்களது தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்படும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுப்படுத்துவதன் மூலம், இந்த ஒப்பந்தமானது நிதி ரீதியிலான உள்வாங்கல்களை விரிவுபடுத்தல், பாலின சமத்துவமின்மையைக் கையாளுதல் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் தொழில்முயற்சிகளுக்கு உதவியளித்தல் ஆகிய ஐக்கிய அமெரிக்காவின் பரந்த குறிக்கோள்களுடன் ஒத்திசைகிறது.

“பொருளாதார ரீதியாக வலிமையடைந்த பெண்கள் தங்களை மேம்படுத்துவதோடு குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளையும் மாற்றுகிறார்கள். சமூகங்கள் முன்னேற்றமடைய வேண்டுமாயின், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகல்கள் பெண்களுக்கு இருத்தல் அவசியம். தொற்றுநோயின் பொருளாதாரத் தாக்கங்கள் பாலின சமத்துவமுடைய முதலீட்டை மேலும் அவசியமாக்குகின்றன.” என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் (DFC) என்பது, உலகெங்கிலுமுள்ள நாடுகளில் தனியார் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு நிதியளிப்பை வழங்குதல் மற்றும் அதற்கு வசதியளித்தலுக்கு முதன்மைப் பொறுப்பாக இருக்கும் ஐக்கிய அமெரிக்க அரசின் அபிவிருத்தி நிதி நிறுவனமாகும்.

இந்த உதவியானது, பெண்களின் பொருளாதார வலுவூட்டலை நோக்கிய தனியார் துறை முதலீட்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளதுடன் இதற்கு மேலதிகமாக 2025 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் புதிதாக உருவாகும் சந்தைகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ள DFC இன் 2X மகளிர் முன்முயற்சியின் (DFC’s 2X Women’s Initiative) அங்கமொன்றாகும்.