கொவிட் 19க்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உறுதுணையாக ஒட்சிசனை அனுப்புகிறது இந்தியா

கொவிட் 19க்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உறுதுணையாக ஒட்சிசனை அனுப்புகிறது இந்தியா

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் இந்தியாவின் உறுதிப்பாட்டின் கீழ் இந்தியக் கடற்படை கப்பலான சக்தி, நூறு தொன்கள் (5 கொள்கலன்கள்) நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் நேற்று (19) வியாழக்கிழமை விஷாகபட்டினத்திலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளது.

திரவநிலை மருத்துவ ஒட்சிசனுக்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சமுத்திரசேது - 2 நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படை கப்பல் சக்தி இப்பணியில் ஈடுபட்டுள்ளது.

இக்கப்பல் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படைக்கப்பல் சக்தி தனது பயணத்தினை ஆரம்பித்திருந்த சமநேரத்தில் 40 தொன்கள் நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் இலங்கை கடற் படையின் கப்பலான சக்தியும் சென்னையிலிருந்து கொழும்பை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தமை இரு நாடுகளினதும் பல்வேறு துறைகளுக்கும் இரு தரப்பு கடற்படையினருக்கும் இடையிலான தோழமை மற்றும் பிணைப்பினை வெளிக்காட்டுகின்றது.

பொதுவான ஒரு நோக்கத்துடன் சக்தி என்ற பெயருடைய இவ்விரு கப்பல்களும் இந்தியாவின் இருவேறு பகுதிகளிலிருந்து ஒரு பயண முடிவிடத்தை நோக்கி தமது பிரயாணத்தை ஆரம்பித்திருக்கின்றமை மிகவும் அரிதான சம்பவமாக கருதப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக 140 தொன்கள் நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசன் சென்னை மற்றும் ஹால்டியா ஆகிய துறைமுகங்களிலிருந்து அடுத்தவாரம் கொழும்பை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

திரவநிலை  மருத்துவ ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் மற்றும் ஏனைய மருத்துவ சாதனங்களை பல்வேறு நாடுகளுக்கு உடனடியாக விநியோகிப்பதற்காக இந்திய கடற் படையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையே சமுத்திர சேது-2 என அழைக்கப்படுகிறது.

இது போன்ற திட்டங்களுக்காக முன்னர் ஏழு இந்திய கடற்படை கப்பல்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தன. கடந்த வருடம் இந்தியாவிலும் இலங்கையிலும் சிக்கியிருந்த மக்கள் சமுத்திரசேது நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படை கப்பல் ஜலஸ்வா மூலமாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

பெருநோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் காலப்பகுதியில் தேவையின் அடிப்படையில் இந்தியா, இலங்கைக்கான உதவிகளை வழங்கி வந்துள்ளது. 2020 ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் கிட்டத்தட்ட 26 தொன்கள் மருத்துவ உதவிப் பொருட்கள் இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

2020 ஜூலையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் 2021 ஜனவரியில் இந்தியா அன்பளிப்பாக வழங்கியிருந்த முதற்தொகுதி தடுப்பூசிகள் காரணமாக இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்த காலப்பகுதிக்கு முன்னதாகவே தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.