மஹிந்த, கோட்டாவின் வெளிநாட்டு விஜயங்களுக்கு 40 மில்லியன் ரூபா நிதி

மஹிந்த, கோட்டாவின் வெளிநாட்டு விஜயங்களுக்கு 40 மில்லியன் ரூபா நிதி

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் கடந்த 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐந்து வெளிநாட்டு விஜயங்களுக்கு 40 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த 44 மில்லியனில் 36 மில்லியன் ரூபா முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்வின் இரண்டு விஜயங்களிற்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூன்று விஜயங்களிற்கு ஏழு மில்லின் ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய மூன்ற நாடுகளுக்கு கடந்த வருடம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இத்தாலி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு கடந்த வருடம் விஜயம் செய்திருந்தார். இதில்,  ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கான இத்தாலி விஜயத்திற்கே அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் பலரை முன்னாள் பிரதமர் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு கடந்த 01.01.2022ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தவலவறியும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதற்கு எதிராக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டினை அடுத்து, ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றினால் மேற்படி தகவல்கள் வழங்கப்பட்டன.

சுமார் 14 அல்லது 21 நாட்களுக்கு வழங்க வேண்டிய தகவலை வழங்க ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு 10 மாதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.