கொவிட்- 19 இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு கல்முனை வர்த்தக சங்கத்தினால் நிதியுதவி

கொவிட்- 19 இனால்  வாழ்வாதாரத்தை  இழந்தவர்களுக்கு கல்முனை வர்த்தக சங்கத்தினால் நிதியுதவி

எம்.எம் ஜெஸ்மின், சர்ஜூன் லாபீர்

கொரோனா வைரஸ்  பரவலினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மக்களிற்கான  நிதியுதவி கல்முனை வர்த்தக சங்கத்தினால் இன்று (06) புதன்கிழமை வழங்கப்பட்டது.

கல்முனை பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நிதியின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

இச்செயற்திட்டத்தினை கல்முனை வர்த்தக சங்கத்தினர் 3 கட்டங்களாக செயற்படுத்தினர். அதில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்களுக்கு ரூபாய் 968,000 நிதியும், கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு ரூபாய் 750,000 நிதியும் பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான நிதியுதவி அங்குள்ள 19 பள்ளிவாசல்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு வர்த்தக சங்க தலைவர் கே.எம் சித்தீக் தலைமையில் கல்முனை மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த,  வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையினால் பாதிக்கப்பபட்ட கல்முனை பிரதேச மக்களுக்கு கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களினால் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதியுதவி இதுவரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்கள்