கொவிட்-19 சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்

கொவிட்-19 சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்

ரோஹண ஹெட்டிஆரச்சி
நிறைவேற்றுப் பணிப்பாளர்
பஃவ்ரல் அமைப்பு

கொவிட் 19 வைரஸ் மானுட வர்க்கத்திற்கு தம்மைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும், சுற்றாடல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அபிவிருத்தி அதேபோல் பணம் போன்ற பல்வேறு விடயங்களை பற்றி மீளச் சிந்திக்க வைத்துள்ளது.

அது மட்டுமன்றி, கொவிட் 19 மனிதர்களை மதிப்பிடவும் வாசிக்கவும் சமூகத்திற்கு ஓர் அவகாசத்தையும் நல்கியுள்ளது. இலங்கையின் பிரஜைகளாக நாம், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக சமூகத்தின் தீர்க்கமான சக்திகளின் இயக்கத்தைக் கொண்டு அவற்றின் நேர்மை, நாட்டு மக்கள் பற்றி கொண்டுள்ள மனப்பாங்கு மற்றும் ஜனநாயகத்திற்கு அவர்கள் அளித்துள்ள பெறுமதி போன்றவற்றை அளவிடக் கூடியதாய் உள்ளது.

பொதுமக்களின் இந்த மதிப்பீட்டு வரம்பினுள் அரசியல் தலைவர்கள், தேர்தல் ஆணைக்குழு, ஒரு சில தொழில்வாண்மையாளர்கள், தொழிற் சங்கங்கள், சில சமயத் தலைவர்கள், அரசியல்மயத்திற்கு ஆட்பட்ட சில சமூக செயற்பாட்டாளர்களும் ஊடக நிறுவனங்களும் அடங்குகின்றன.
 
கொவிட் 19 மக்களுக்கு அரிய வாய்ப்பொன்றையும் வழங்கியிருக்கின்றது. ஆனால், அதை மக்கள் எந்தளவுக்கு பாரதூரமாக எடுத்துக்கொள்கின்றனர் என்பது சிக்கலானது. பாராளுமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவும், ஜனாதிபதியின் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சுகாதாரத் தரப்பும், பாதுகாப்பு தரப்பும் வெளிப்படுத்தி வருகின்ற காத்திரமான பங்களிப்பு மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச்செய்துள்ளது.

ஆயினும், கொரோனாவுடன் இணைந்துள்ள அரசியல் அருவருப்பானது. மக்கள் கொரோனாவுடன் வாழத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா அடியோடு ஒழியும் நாள் பற்றிக் கூறுவதற்கு எவருமே இல்லாத நிலையில் நாம் தேர்தல் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தேர்தல் எத்திகதியில் நடத்தப்பட்டாலும் தேர்தல் ஆணைக்குழுவும், ஏனைய அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டிய சில விடயங்கள் பற்றி கவனம் செலுத்தியுள்ளனர்.அவற்றில் தீர்மானமிக்க சில விடயங்களை கீழுள்ளவாறு வரிசைப்படுத்தலாம்.

1. தேர்தலுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்புக்கும் சுகாதாரக் காப்பு ஏற்பாடுகளைச் செய்தல்.
2. சகல அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு சரிநிகர் வாய்ப்பை உருவாக்குதல்.
3.    வாக்காளர் உட்பட சகல தரப்புக்கும் தேர்தல் செயற்பாடு மற்றும் சுகாhரக் காப்பு தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தல்.
4.   அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தமது வேலைத் திட்டம் தொடர்பில் மக்களை வழிப்புணர்வு செய்வதற்காக நியாயமான அதேபோல் பூரணமான வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்குதல்.
5.   தேர்தல் செயற்பாட்டில் உருவாகும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பிக்கை தரும் பொறிமுறையொன்றை உருவாக்குதல்.
6. பாராளுமன்றத் தேர்தலின் சமுதாய வலிதினைப் பாதுகாக்கத் தேவையான திட்டங்கள், அதாவது, 50% மேற்பட்ட வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம்.  
7. கொவிட் 19 நிலைமைக்கு அமைவாக தேர்தல் செயற்பாட்டில் குறிப்பாக, வாக்களிப்பு நிலையங்கைச் சார்ந்து மேற்கொள்ளப்படும் நடைமுறை ரீதியான மாற்றங்கள் தொடர்பாக வாக்காளர்களை வழிப்புணர்வு செய்வதற்கான வேலைத்திட்டம்.  

தேர்தலுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்புக்கும் சுகாதாரக் காப்பு ஏற்பாடுகளைச் செய்தல்:

தேர்தலொன்றில் ஒட்டு மொத்த நாடும் பங்கீடு கொண்டாலும் அதில் ஒரு சிலர் தேர்தல் செயற்பாட்டில் அளப்பரிய பங்கினை வகிக்கின்றனர். தேர்தல் ஆணைக்குழு உட்பட அரச உத்தியோகத்தர்கள், பொலிசார் உட்பட பாதுகாப்பு தரப்பினர், வேட்பாளர்கள், வாக்காளர்கள், தேரத்தல் அவதானிப்பாளர்கள், ஊடகவியாலாளர்கள் போன்ற ஒவ்வொருவரினதம் வகிபாகமும், அதன் சுமையும் மாறுபடுகின்றபோதும் தேர்தல் செயற்பாட்டின் வெற்றிக்கு இவர்கள் தேவையான இடையீட்டைச் செய்கின்றனர்.

ஆகவே, தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தீர்மானிக்கும்போது இந்த அனைத்து தரப்பினரின் சுகாதாரத்திற்கு அல்லது உயிருக்கு உள்ள அனர்த்தம் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதேபோல்,ஒவ்வொரு தரப்பும் தத்தமது கடமைகளை ஆற்றுவதற்குள்ள இயலுமை மற்றும் தடைகள் பற்றியும் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, தேர்தல் செயற்பாட்டில் இணையும் அரச உத்தியோகத்தர்களின் சுகாதாரக் காப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அது அவர்களின் கடமையின் ஓர் அங்கமாக இருப்பினும் மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்கு பாரிய அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டியுள்ளதால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து நேராத வகையில் திட்டங்களை வகுக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்குரியது.

தேர்தல் செயற்பாட்டின் சகல கட்டங்களையும் பகுப்பாய்வு செய்து, உத்தியோகத்தர்கள் கூடுதலாக ஒன்று கூடும் வாய்ப்புகளைக் குறைத்து, அதனூடாக ஏற்படவிருக்கும் ஆபத்துக்களை குறைப்பதற்கும் ஏற்ற வகையில் சுகாதார காப்பு வழிமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். இவ்விடயத்தில் பிற உலக நாடுகளின் அனுபவங்களை கவனத்தில் கொள்ள முடியும்.

வாக்கெண்ணும்போது ஏற்படக் கூடிய சுகாதார ரீதியான அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக பரப்பில் கூடிய மண்டபங்களைப் பயன்படுத்தல், வாக்கெண்ணலை அவதானிப்பதற்காக தொழில்நுட்ப வழிமுறைகளைக் கையாளுதல், முகவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் அரசில் கட்சிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஒரு சாதாரண சூழ்நிலையில் தேர்தல் ஒன்றின் முக்கிய தரப்பான வேட்பாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய பொறுப்பினை தேர்தல் ஆணைக்குழு கொண்டிராத போதும், கோவிட் தொற்று காரணமாக தேர்தல் தொடர்பில் எடுக்கப்படுகின்ற முடிவுகளின்போது இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவால் புறந்தள்ளிவிட முடியாது.

அதேபோல் தேர்தல் அவதானிப்பாளர்கள், ஊடகங்கள் மற்றும் வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பின் சுகாதார காப்பு பேணப்படும் வகையிலும், அவர்களுடனான சிறந்த இணைப்பாக்கம் மற்றும் புரிதலுடன் ஆணைக்குழு முடிவுகளை எடுக்குமனால் அது நல்ல முடிவாக அமையும் அதேசமயம் அதன் பொறுப்பு அனைவரையும் சார்வதாக அமையும்.

சகல அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு சரிநிகர் வாய்ப்பினை உருவாக்குதல்:

"தேர்தல் என்ற உடனேயே அதன் பொருள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் என்றாகிவிடுகிறது". இது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய அடிக்கடி உச்சரிக்கும் வாசகம்.

அப்படியானால், தேர்தல் ஒன்றை பெயரளவில் நடத்துவதன் மூலம் அதன் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படமாட்டா. இங்கு சகல வேட்பாளர்களுக்கும் சரிநிகர் வாய்ப்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டிய முக்கியமான விடயம். அத்தகைய ஒரு நிலை இல்லையென்றால் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக அதனை ஏற்படுத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

அது தற்போதுள்ள சட்ட வரம்பு மற்றும் நடைமுறையில் மிகக் கடினமான ஒரு பணியாகும்.இருப்பினும், தேர்தல் ஆணைக்குழுவால் அதை புறக்கணித்து விட முடியாது. அந்த வகையில் அதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென நம்புகிறோம்.

இந்த விடயத்தில் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுப்பவர்கள், சாதாரண சூழலில் ஒரு தேர்தலை நடத்துவதைவிட மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும். இம்முறை தேர்தலில் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 3,652 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 3,800 வேட்பாளர்களுமாக 7,452 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரசார செயற்பாட்டில் இவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கொரோனா நலன்புரி விடயங்களில் ஏற்கனவே அரசியல் சாயை கலந்துள்ளதால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு மேலதிக நன்மைகள் கிடைக்கக்கூடும்.

எதிரணியில் உள்ள ஒருசில வேட்பாளர்களும் நலன்புரி செயற்பாடுகள் ஊடாக மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய பேரிடரின்போது இவ்வாறான நிலைமைகளை முற்றாக தடுத்து நிறுத்துவது சாத்தியப்படாவிட்டாலும்  விருப்புக்குரிய இலக்கங்கள் வழங்கப்பட்ட பின்னர் சரிநிகர் வாய்ப்பை பேணிக்கொள்ள தேர்தல் ஆணைக்குழு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

வாக்காளர் உட்பட சகல தரப்புக்கும் தேர்தல் செயற்பாடு மற்றும் சுகாhரக் காப்பு தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தல்:

சுகாதார ரீதியில் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் நாம் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அதன் அனைத்து நடவடிக்கைகளும் ஏனைய தேர்தல்களில் உள்ளவாறு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக தேர்தலின் சகல பங்கீடுபாட்டாளர்கள் மத்தியிலும்  நம்பிக்கையைகட்டியெழுப்ப வேண்டும்.

தேர்தல் செல்லுபடியாவதற்கு அதன் மீதான நம்பிக்கை தீர்க்கமான ஒரு காரணி. அதில் வெளிப்படைத் தன்மையை கட்டியெழுப்புவதற்கு தேர்தல் செயற்பாட்டின் ஒவ்வொரு நகர்வுபற்றியும் பொதுமக்கள் உட்பட அனைவரையும் விழிப்புணர்வு செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வழிமுறை இருக்க வேண்டும்.

மேலும், தேர்தல் செயற்பாட்டில் இணைந்து கொள்வதன் ஊடாக எவருக்கும் சுகாதாரம்  தொடர்பான சிக்கல் வரப்போவதில்லை என்ற நம்பிக்கை உருவாகும் வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அந்த நம்பிக்கையை விதைப்பது சாத்தியமானால் அரச உத்தியோகத்தர்கள் இடையூறு இன்றி தேர்தல் செயற்பாட்டில் களமிறங்குவர்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தமது வேலைத் திட்டம் தொடர்பில் மக்களை வழிப்புணர்வு செய்வதற்காக நியாயமாக அதேபோல் பூரணமான வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்குதல்:

அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செயற்பாட்டில் சரிநிகர் வாய்ப்பு இன்றியமையாத ஓர் அங்கமாக இருப்பதைப் போலவே, அதில் தமது வேலைத்திட்டம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வு செய்வதற்கு நியாயமான பொறிமுறை ஒன்றும் இருக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள் அதாவது பாரிய விளையாட்டு மைதானங்களில் ஆதரவாளர்களை ஒன்று கூட்டி கூட்டங்களை நடத்தும் பாரம்பரியம் கடந்த 72 வருடங்களாக இருந்து வருகிறது.

எவ்வாறாயினும், சமூக இடைவெளியை பேணியவாறு இவ்வாறான கூட்டங்களை நடத்துவது சாத்தியமற்றது என்பதால் மாற்று பிரசார உத்திகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக்கு வீடு செல்லுதல், சிறு குழுக் கூட்டங்கள், பிரசுரங்களை வினியோகித்தல், சமூக ஊடகப் பயன்பாடு, கிராம உத்தியோகத்தர் பிரிவு வாரியாக புதிய அறிவித்தல் பலகைகளை அமைத்து ஓர் ஒழுங்கின் படி விருப்பு இலக்கங்கள் காட்சிப்படுத்துதல், தேர்தல் ஆணைக்குழு  தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்களை வெளியிடும்போது கட்சிகளிலிருந்து பெறப்பட்ட சரியான எண்ணிக்கை படி அவ்வாறான அறிவித்தல்களை தயாரிப்பது குறித்து ஆராய்தல், கட்சித் தலைவர்களுக்கு மைய நீரோட்ட ஊடகங்களில் நேரத்தை ஒதுக்குதல் போன்ற புதிய முறைகள் தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எனினும், வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தமது வேலைத்திட்டம் மற்றும் விருப்பு இலக்கம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வு செய்வதற்கான ஒரு வழிமுறை இருக்க வேண்டும். அதேபோல் சூழல்நேய  அமைதியான மற்றும் சட்டரீதியான தேர்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தற்போதுள்ள கள நிலைமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்தல் செயற்பாட்டில் உருவாகும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பிக்கை தரும் பொறிமுறையொன்றை உருவாக்குதல்:

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான முடிவினை எடுக்கும்போது தேர்தல் முறைப்பாடுகளை விரைவாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை செய்யும் ஒரு பொறிமுறையை அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் செயற்பாடு தொடங்கிய பின்னர், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் அவதானிப்பு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்கத் தவறுவோமானால் தேர்தல் செயற்பாடு மீதான நம்பிக்கை தகர்ந்து போகலாம்.

குறிப்பாக அதிகாரம், பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல், தேர்தல் சட்டமீறல்கள், வன்முறைச் சம்பவங்கள், பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்றவற்றுக்கு துரித இடையீடு தேவைப்படுகின்றது.

கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் சர்ச்சை விசாரணை தீர்மான குழு (EDR UNIT) விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் முறையாக இயங்க வேண்டும்.

மேலும், அது சகல பங்ககீடுபாட்டாளர்களையும் கொண்டிருக்க வேண்டும். அதாவது, தேர்தல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொலிசார், அரசியல் கட்சி முகவர்கள், அவதானிப்பு நிறுவனங்களின் முகவர்களும் அதில் உள்வாங்கப்பட வேண்டும்.

கிடைக்கின்ற ஒவ்வொருமுறைப்பாட்டுக்கும் துரித நடவடிக்கை எடுக்கும் வழிமுறை இருக்க வேண்டியதுடன் அதுகுறித்து அனைவரையும் அறிவுறுத்த வேண்டும். இதனால் மட்டுமே பொது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

பாராளுமன்றத் தேர்தலின் சமுதாய வலிதினைப் பாதுகாக்கத் தேவையான திட்டங்கள் அதாவது, 50%  மேற்பட்ட வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம்:

எந்த ஒரு தேர்தலிலும் செல்லுபடியாகும் தன்மை நிலைபெறுவதில் அளிக்கப்படும் வாக்கு வீதம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இந்தப் பிராந்தியத்தில் நடத்தப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப்படியான வாக்கு வீதத்தை நாமே பதிவு செய்துள்ளோம்.

அதாவது 70%- 80% அளவில் வாக்கு வீதத்தை தக்க வைத்துக் கொள்வதில் தேர்தல் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வெற்றி கண்டுள்ளனர். கோவிட் சமூக நெருக்கடியில் நடத்தப்படுகின்ற தேர்தலிலும் குறைந்தபட்சம் 50% மேற்பட்ட வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.

அந்த வகையில் தேர்தல் நடத்தப்படும் திகதி, வாக்கெடுப்பு நிலையத்தின் ஒழுங்குகள் சுகாதார முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதை வாக்காளர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

தாம் வாக்களிக்க வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்வதால் கோவிட் தொற்றுக்கு ஆளாக மாட்டோம் என்ற புரிதல் வாக்காளர்களுக்கு ஏற்பட வேண்டும். ஆகவே, உலகத்தின் பிற நாடுகள் கையாண்டுன்ன வழிமுறைகளையும், மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்களையும் ஆராய்ந்து தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்க வேண்டும்.

சமூக இடைவெளியைப் பேணுதல், முதியவர்கள், அங்கவீனமுற்றவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றவர்களுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றையும், வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்காக வழிமுறையையும், சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான பிரத்தியேக வழிமுறை ஒன்றையும், வாக்கெடுப்பு நிலையத்தினுள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறை அத்துடன் தேர்தல் நாளன்று பொய்யான பிரசாரங்களை தடுப்பதற்கான வழிமுறை ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும்.

கொவிட் 19 நிலைமைக்கு அமைவாக தேர்தல் செயற்பாட்டில் குறிப்பாக, வாக்களிப்பு நிலையங்கைச் சார்ந்து மேற்கொள்ளப்படும் நடைமுறை ரீதியான மாற்றங்கள் தொடர்பாக வாக்காளர்களை வழிப்புணர்வு செய்வதற்கான வேலைத்திட்டம்:

கொவிட் 19 காரணமாக தேர்தல் செயற்பாட்டில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகள், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களை விழிப்புணர்வு செய்வதற்கு முறையானதும் தொடர்ச்சியானதுமான வேலைத்திட்டமொன்றை தேர்தல் ஆணைக்குழு கொண்டிருக்க வேண்டும். அதனூடாக மக்களுக்கு தொடர்ச்சியாக தகவல்கள் சென்றடைய வேண்டும்.

தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்களில், மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு.

தேர்தல் திகதியை தொடர்ந்தும் பிற்போட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு அல்ல. இருப்பினும், ஜனநாயகம் என்ற பெயரில் உயிராபத்தை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு நடைமுறைகளை கையாண்டு ஜனநாயகத்தின் நல்லிருப்பு கருதி பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தெரிவு செய்ய எமக்குள்ள உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்.

தகவல்:
கே.எம். றினோஸ்
பஃவ்ரல் அமைப்பு