மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றல்; ஆவணங்களில் இந்திய ரிசேர்வ் வங்கி கைச்சாத்து

மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றல்; ஆவணங்களில் இந்திய ரிசேர்வ் வங்கி கைச்சாத்து

இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களில் இந்திய ரிசேர்வ் வங்கி கைச்சாத்திட்டுள்ளது.

இந்த பரஸ்பர நாணய பரிமாற்றல் 2022 நவம்பர் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பரஸ்பர நாணய பரிமாற்றல் குறித்த தகவல்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த  ஜூலை 14 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்‌ஷ்மனுடன் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கேஜேக்கப் பரஸ்பர நாணய பரிமாற்றம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இலங்கையுடன் சுமூகமான இருதரப்பு பேச்சுக்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் திகதி இலங்கையின் இருதரப்பு கடன் மீள் கொடுப்பனவினை ஒழுங்கமைக்கும் தொழில்நுட்ப ரீதியிலான கொழும்பிலுள்ள பேச்சுக்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த்து.

கொவிட் 19 காரணமாக மேலெழும் சவால்களை முறியடித்தல், பொருளாதார விவகாரம் மற்றும் இலங்கை இந்திய நட்புறவின் பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பரஸ்பரம் நன்மை தரும் விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்ற தலைமைத்துவங்களின் வினைத்திறன் மிக்க ஈடுபாடு அவசியம் என்பதை இந்த நேர்மறையான அபிவிருத்திகள் காண்பிக்கின்றன.