இணையவழி பாதுகாப்பு மசோதா சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் என 56 சதவீதமானோர் நினைக்கிறனர்: வெரிட்டே ரிசர்ச்

இணையவழி பாதுகாப்பு மசோதா சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் என 56 சதவீதமானோர் நினைக்கிறனர்: வெரிட்டே ரிசர்ச்

வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் கோரப்பட்ட ஆய்வொன்றினால், இணையவழி பாதுகாப்பு மசோதா குறித்து தங்களுக்குத் தெரியும் என்று கூறியவர்களில் 56% பேர் இது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தைக் மட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

"சமூக ஊடகங்களில் நடத்தையை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அரசாங்கம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது, அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?" என்ற கேள்விக்கு, பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (34%) "ஆம்" என்று பதிலளித்தனர்.

"ஆம்" என்று கூறியவர்களில், 56% பேர் "சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைக் இது மட்டுப்படுத்தும்" என்றும், 25% பேர்  "அதிக மாற்றத்தை ஏற்படுத்தாது" என்றும், 19% பேர் "சமூக ஊடகங்களின் தவறான பயன்பாட்டைக் குறைக்கும்" என்றும் கூறியுள்ளனர்.

மசோதாவின் நிலை

செப்டம்பர் 18 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அக்டோபர் 3 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்பு மசோதா, வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவொன்றை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மசோதா தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அதிலுள்ள 31 வாசகங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் தற்போதைய நிலையில் நிறைவேற்றப்படுவதற்கு, மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 அக்டோபரில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்புகள் (Syndicated Surveys) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு வன்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட்டினால் நடத்தப்பட்டது.

வெரிட்டே ரிசர்ச்சின் சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.