பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் தொடர்பில் விசாரிக்குமாறு TISL அழைப்பு

பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள்  தொடர்பில் விசாரிக்குமாறு TISL அழைப்பு

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் விபரிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது (TISL) கடந்த திங்கட்கிழமையன்று (15) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஓர் முறைப்பாட்டினை சமர்ப்பித்தது.

கடல்கடந்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புக்களில் பாஸ்கரலிங்கத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாக பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) நடாத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பகிரங்கப்படுத்திய தகவல்கள், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 23A பிரிவின் கீழ் குற்றங்களுக்குச் சமமான செயல்களாக சுட்டிக்காட்டலாம் என TISL நிறுவனம் குறிப்பிட்டது.

ஏனெனில் அமைச்சின் ஓர் செயலாளராக அல்லது பிரதமரின் ஆலோசகராக பணியாற்றிய ஒரு அரச அதிகாரிக்கு அவரது மாதாந்த சம்பளத்தின் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட குறித்த செல்வத்தினை அடைய முடியாது.

ஆகவே, பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பில் ஓர் விசாரணையினை ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவிடம் TISL நிறுவனம் தனது கோரிக்கையினை முன்வைத்தது.

நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் (FATF) அடிப்படையில், பாஸ்கரலிங்கம் ஓர் அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்படலாம் என்றும் TISL நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.

PEP என்பது தனக்கு ஒப்படைக்கப்பட்ட முக்கிய பொதுச் செயற்பாட்டினை அல்லது முக்கிய பொது பொறுப்பினை இலஞ்சம், ஊழல், பண தூய்தாக்கல், மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யக்கூடிய அதிக சாத்தியப்பாடுளை கொண்ட ஓர் தனிநபர் என வரையறுக்கலாம்.

இலங்கையின் பொது நிதி மற்றும் பொது வளங்களின் உரிமையாளர்களான பொதுமக்களின் பொது நலன் கருதியே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்துமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை TISL நிறுவனம் வலியுறுத்தியது.