20க்கு ஆதரவளித்ததன் பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டது: நஸீர் அஹமட்

20க்கு ஆதரவளித்ததன் பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டது: நஸீர் அஹமட்

அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் தெரிவிக்கையில்,

"இறைவன் எமக்குத் தந்த அமானிதமாகவே எம்,பி பதவியைக் கருதுகிறோம். பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படும் தீர்ப்பு நாளில், எம் பணிகளில் எல்லாம் வல்ல இறைவன் திருப்தியுற வேண்டும். இதற்காகத்தான் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாதுர்யமாகப் பயன்படுத்தினோம்.

உடன் பலன் கிடைக்காததற்காக, எமது வியூகங்கள் பற்றி சிலர் தரக் குறைவாக விமர்சித்தது மட்டுமன்றி தனிப்பட்ட பலர் கேலியும் செய்தனர். கொடுங்கோலர்களின் கரங்களைப் பலப்படுத்தியதாக, எங்களைக் கொச்சைப்படுத்தவும் செய்தனர்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு எப்படியாவது அனுமதி எடுத்துவிட வேண்டுமென உழைத்த நாங்கள், சந்திக்க நேரிட்டது ஏராளம்.பழிவாங்கும் மனநிலையிலிருந்த பல எம்பிக்களை, இவ்விடயத்தில் இணங்கச் செய்வதற்கு நாங்கள் எடுத்த எத்தனங்களை, குப்பை கிளறிகள் அறியப் போவதுமில்லை.

வெறும் உணர்ச்சிவசப்படலுக்காக சுமார் இருபது வருடங்களாக, ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களித்த ஒரு சமூகத்தின் மத உரிமையை இருபதுக்கு வாக்களித்த நொடிப்பொழுதில் வென்றெடுக்க முடியுமா? இவ்வாறு எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா?

இதற்குப் பின்னரும், சிலரின் "சம்சா வெடில்" பேச்சுக்கு எமது சமூகம் ஏமாறப் போகிறதே! இதுதான் எம்மைக் கவலைப்படுத்துகிறது. உலக முஸ்லிம்களின் உள்ளங்களையே, தேன் தொட்டியாக்கிய ராஜபக்ஷ அரசின் இந்த முடிவுக்காக எனது, சிரசை நான் சஜ்தாவில் கிடத்துகிறேன்.

உள்ளங்களை ஆள்கின்ற இறைவன் ஆட்சியாளர்களின் மனநிலைகளை மாற்றிவிட்டான். எனினும் எம்மில் சில சகோதரர்கள் எரிக்கப்பட்டது, கண்ணீரைச் செந்தணலாக்கிக் கொண்டே இருக்கிறது.

எமது நம்பிக்கையாலேயே, இத்துயரங்களை ஆற்றுப்படுத்துகிறோம். இனிமேல், எமது உறவுகள் நெருப்பில் எரியப்போவதில்லை. இருபதை ஆதரித்த எமது அரசியல் வியூகம் வென்றும் விட்டது "அல்ஹம்துலில்லாஹ்".

இதற்காக உழைத்த அரசாங்கம், பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் இதை அறிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்" என்றார்.