முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து பயணிக்குமா?

முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து பயணிக்குமா?

றிப்தி அலி

கடந்த நவம்பர் மாதம் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான சிறுபான்மை இன மக்கள் ஆதரித்த வேட்பாளரான சஜித் பிரேமதாச 1,360,016 வாக்குகள் வித்தியாசலத்தில் பாரிய தோல்வியை தழுவினார்.

இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் மற்றும் மலையக தமிழ் ஆகிய சிறுபான்மையின மக்கள் பரந்து வாழும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே சஜித் பிரேமதாச வெற்றி பெற்றார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான இன்றைய கால கட்டத்தில்  முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் மத்தியில் ஒருவித அச்ச மனோநிலை காணப்படுவதை அவதானிக்க முடிக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில், நாட்டில் நல்லாட்சியினை ஏற்படுத்துமாறு நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்கள் நோன்பு பிடித்து இறைவனிடம் பிராத்தனை செய்தனரே தவிர, எந்தவொரு முஸ்லிலும் கோட்டாபய ராஜபக்ஷவினையோ அல்லது சஜித் பிரேமதசாவினையோ ஜனாதிபதியாக தெரிவுசெய்யுமாறு இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்ளவில்லை.

முஸ்லிம்கள் கலா கத்ரை நம்புபவர்கள் என்ற அடிப்படையில் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த ஆட்சியினை அங்கீகரித்தே ஆக வேண்டும்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் இந்த தேர்தல் தோல்வியினை அடுத்து சிறுபான்மையின மக்களின் ஒற்றுமை பற்றி பரவலாக பேசப்படுகின்றது. எனினும் இதுவொரு பாரிய கேள்விக்குரியான நிலையிலேயே காணப்படுகின்றன.

வௌ;வேறான சூழ்நிலையில் கலந்து மற்றும் பிரிந்து வாழ்கின்ற இந்த சிறுபான்மையின மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமையே இதற்கான பிரதானமான காரணமாகும்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் செல்வாக்கினைப் பெற்ற கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடிப்படையிலும் மலையக மக்களின் செல்வாக்கினைப் பெற்ற கட்சிகள் தமிழ் முற்போக்கு முன்னணி என்ற அடிப்படையிலும் கூட்டாக செயற்படுகின்றன.

அதவாது, இலங்கை தமிழரசுக் கட்சி, புளோட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பே தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும்.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்களம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ் முற்போக்கு முன்னணியாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு கூட்டமைப்புகளில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மத்தியில் பாரிய சர்ச்சைகள் காணப்பட்டாலும் தாங்கள் பிரதிநிதித்துவப்படும் சமூகத்திற்காக அவர்களின் ஒற்றுமை தொடர்ந்துகொண்டே செல்கின்றது.

இந்த ஒற்றுமை முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் மத்தியிலும் ஏற்பட வேண்டும் என்ற நிலை இன்று தோன்றியுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதற் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்றி காணப்படுகின்றன அமைச்சரவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த இந்த அமைச்சரவை காணப்படுகின்றது.

அதுபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது இனவாத கருத்துக்களை முன்னெடுத்தனர்.

இதனால் நேரடி அரசியல் ஈடுபடுகின்ற அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் கட்சிகள் தாங்கள் ஆதரித்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னணி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலைப் போன்று எதிர்காலத்திலும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இவர்களின் இந்த தீர்மானம் சிறந்ததாக காணப்படுகின்றது. எனெனினல் கடந்த காலங்களில் பாரிய கட்சிகளினால் இந்த கட்சி பல தடவைகள் ஏமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து பயணிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் அக்கட்சியினரைப் போன்று முஸ்லிம் சமூகத்தில் மூன்றாவது சக்தியாக மாறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

அதேபோன்று தேசிய காங்கிரஸின் தலைவரான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கி செயற்பட்டே வருகின்றார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, அவருடனேயே நெருங்கி செயற்பட்டு வருகின்றார்.

இதனால் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் செல்வாக்குமிக்கவராக அவர் காணப்படுகின்றார். எனினும் அவர் தற்போது மக்கள் பிரதிநிதியில்லை. இதனால் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவரினால் பங்கேற்க முடியாது. இதேவேளை, விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலின் ஊடாக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவாரா என்பதும் கேள்விக்குரியாகவுள்ளது.

இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட கடந்த அரசாங்கத்தின் பங்காளிகளாகச் செயற்பட்ட ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமாவது ஒரு குடையின் கீழ் இணைவது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளினதும் அடிமட்ட போராளிகள் மத்தியில் பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் கட்சி தலைமைகள் மத்தியில் சிறந்த உறவு காணப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இந்த இரண்டு முஸ்லிம் தலைமைகளும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வெற்றியுமடைந்தனர்.

அது போன்று கடந்த ஆட்சியில் இந்த இரண்டு முஸ்லிம் தலைவர்கள் இணைந்து மேற்கொண்ட அனைத்து விடயங்களும் வெற்றியிலேயே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் நேற்றோ அல்லது இன்றோ நெருங்கி செயற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆலோசனையில் 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவமொன்றினை பெரும் நோக்கில் குறித்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையிலான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் இரட்டை இலை சின்னத்தில் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிட்டமை வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாகும்.

எனினும் இந்த முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை நீடிக்கவில்லை. எனினும் கடந்த ஆட்சியில் ஐக்கிய தேசிய கட்சியினையே இந்த இரண்டு கட்சிகளும் ஆதரித்ததுடன் இன்று வரையும் தொடர்;ச்சியாக அக்கட்சியுடனேயே இணைந்து செயற்பட்டு வருகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவியிலிருந்து நீக்கப்பட்ட போது அவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு குறித்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்ததுடன் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி அழகு பார்த்தன.

இதன்போது, இரண்டு கட்சிகளினதும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து புனித உம்ரா கடமையினை மேற்கொண்டமையினையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பேரினவாத கட்சிகளின் நலனுக்காக இணைந்து செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் சமூகத்தின் நலன்கருதி ஒரு குடையின் கீழ் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனையே நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்களும் இன்று எதிர்பார்க்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும் இதனையே வரவேற்கின்றனர். இந்த கட்சிகளின் ஒற்றுமையின் ஊடாக களுத்துறை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட கால கனவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இலகுவாக பெற முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதனால் எதிர்வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் சுமார் 10 ஆசனங்களை கைப்பற்ற முடியும்.

இதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை போன்று பலம் வாய்ந்த சக்தியாக இந்த முஸ்லிம் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் செயற்பட முடியும். இந்த

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான றிசாத் பதியுதீனுடன் கேட்ட போது, 'இந்த விடயம் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதன் பின்னர் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும்' என்றார்.

எவ்வாறாயினும இந்த முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையினை குழப்பும் வகையில் சில தொண்டர்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதனை சமூக ஊடகங்களின் வாயிலாக அவதானிக்க முடிகின்றது. சமூகத்தினை காட்டிக்கொடுக்கும் இவர்களின் இந்த  செயற்பாடு கண்டிக்கதக்கதாகும்.

அதேபோன்று, 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவது குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள எமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாட வேண்டும்' என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான றிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்த அம்பாறை மாவட்டம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே தங்களின் அரசியல் பயணத்தினை ஆரம்பித்தனர்.

இவ்வாறானவர்கள் மீண்டும் தங்களின் தாய் வீடான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதில் என்ன பிரச்சினை. அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் சுயலாபங்களை மறந்து சமூகத்திற்காக சிந்திக்க வேண்டும். இந்த விடயம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

இதேவேளை, தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவதில் தமிழ் புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னின்று செயற்படுவது வழமையாகும். எனினும் அந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்தில் பாரிய வெற்றிடமாக இன்று காணப்படுகின்றனர்.

அடுத்த பாராளுமன்ற மற்றும் மாகாண சபை ஆகிய தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து ஒரு குடையின் கீழ் போட்டியிடுவதற்கு முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.

இதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையினை உலகறியச் செய்ய முடியும். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கையின் போது முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக இராஜினாமாச் செய்தனர். இதனையடுத்து முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதுடன் முஸ்லிம்களின் ஒற்றுமை உலகறியச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒன்றுபடுவதன் ஊடாக எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சதித்  செயற்திட்டங்களை இலகுவாக முறியடிக்க முடியும்.

இவ்வாறன நிலையில் இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் தங்களின் கருத்து முரண்பாடுகளையும் கடந்த கால கசப்புணர்வுகளையும் மறந்து சமூகத்திற்காக ஒன்றுபடுவது இன்றைய காலத்தின் இன்றியமையாத தேவையாகவுள்ளது.