தூதுவர் பதவிக்கு இலங்கையினால் நியமிக்கப்பட்டவரை ஏற்பதற்கு சவூதி மறுப்பு

தூதுவர் பதவிக்கு இலங்கையினால் நியமிக்கப்பட்டவரை ஏற்பதற்கு சவூதி மறுப்பு

றிப்தி அலி

கடந்த 15 மாதங்களாக வெற்றிடமாக காணப்படும் சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனத்தினை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அஹமட் ஜவாதினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.
இதற்கான அனுமதியினை உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவும் வழங்கியிருந்தது. எனினும் இந்த நியமனத்தினை சவூதி அரேபிய அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் ரிசானா நபீகிற்கு கடந்த 2013ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் சவூதி அரேபியாவிற்கான தூதுவராக அப்போது கடமையாற்றிய அஹமட் ஜவாதினை இலங்கை அரசாங்கம் நாட்டு திருப்பி அழைத்திருந்தது. இதன் காரணமாகவே இவரை மீண்டும் அப்பதவிக்கு நியமிப்பதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடந்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய அஸ்மி தாசீம் மற்றும் ஜித்தாவிற்கான கொன்சியூலர் ஜெனராலாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.டப்ளியூ.ஏ. சலாம் ஆகியோர் திருப்பியழைக்கப்பட்டனர்.
மேற்குறிப்பிட்ட இருவரும் அரசியல் நியமனத்தின் ஊடாகவே இராஜதந்திரிகளாக நியமிப்பட்டனர். இவர்கள் இருவரினதும் திருப்பி அழைப்பினைத் தொடர்ந்து, கடந்த 15 மாதங்களுக்கு மேலதிகமாக குறித்த இரண்டு பதவிகளுக்கும் வெற்றிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.