முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் மேற்கொண்டவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை: ஹக்கீம்

முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் மேற்கொண்டவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை: ஹக்கீம்

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கலவரங்களை மேற்கொண்டவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மூத்த ஊடகவியலாளா கலாபூஷணம் 'ஈழத்து நூன்' எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய 'தட்டுத் தாவாரம்' கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் அவரது பவள விழா மினுவங்கொடை, கல்லொழுவையில் கடந்த சனிக்கிழமை (20) நடைபெற்றது

இதில் உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

"எந்த பத்திரிகைத் துறையை எடுத்து பார்த்தாலும், இன்று நாங்கள் பார்க்கின்ற விடயம்தான்  தலைப்புச் செய்திகளும், ஏனைய பிரதான செய்திகளும் தமிழ், சிங்களப் பத்திரிகைகளில் வேறுபட்ட விதத்தில் கையாளப்படுவதாகும்.

வெளிவருகின்ற செய்திகளில் அதிலும் சிங்களப் பத்திரிகைகளிலும், தமிழ் பத்திரிகைகளிலும் ஒரே செய்திதான் தலைப்புச் செய்தியாக வருவதும் அபூர்வம். ஆனால், நிச்சயமாக அது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அல்லது முக்கிய வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தாலும் அது தலைப்புச் செய்தியாக எல்லாப்பத்திரிகையிலும் ஒரே மாதிரியாக வரும்.

ஆனால், செய்திகளை அந்தந்த மொழிசார்ந்த சமூகங்களுக்கு தேவைப்பட்ட மாதிரியாகத்தான் தமிழ், சிங்கள பத்திரிகைகளில் பிரசுரிக்கின்ற ஒரு அபூர்வத்தை நாங்கள் பார்க்கின்றோம். இந்த மினுவான்கொடை பிரதேசம் 2019 ஆண்டு ஒரு பெரிய கலவரத்திற்குள்ளானது.  அதற்கு முன்னோடியாக குளியாப்பிட்டியில் தொடங்கி கம்பஹா வந்து, மினுவான்கொடையில் மிக மோசமாக நடந்தேறியது.  

இனக்கலவரம் வருகின்ற போது அந்த இனக்கலவரத்திற்கு காரணமாக அமைகின்ற  வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்களை பேசுகின்ற யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கொஞ்சம் திரும்பி பார்க்கப்போனால் எங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு சட்ட ஏற்பாடு இந்த ஐ.சீ.சீ.பி.ஆர் சட்டத்தில் இருக்கின்ற 3ஆவது சரத்து  என்கின்ற விடயம்தான்.

அது எங்களுக்கு ஒரே  இப்படியான கலவரங்கள் நடக்கின்ற போது அதில் ஈடுபடுகின்ற ஆட்களை தண்டிக்கப் பாவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால்,  இனக் கலவரங்கள் 2014ஆம் ஆண்டு நாங்கள் அளுத்கம, பேருவளையில் நடந்ததைக் கண்டோம். அதற்குப் பிறகு கிந்தோட்டையில் கண்டி, திகன, அம்பாறை கலவரங்களை சந்திக்க நேர்ந்தது.  

அதை மாதிரி மினுவன்கொட, குருநாகல் பல இடங்களில் கலவரம் உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்குப் பிறகு எமது மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பின்னால் இருக்கின்ற நிறையப் பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இது வரைக்கும் யாரும் தண்டிக்கப்படவில்லை.  இன்னமும் வழக்குகள் முடிவுக்கு வரவில்லை .

அதேநேரம் இந்த சட்டம் பற்றி  நீதியமைச்சர் கட்டயமாக பார்க்க வேண்டும். இந்த சட்டம் உரிய தேவைக்கு அப்பால்பட்ட வேறு விடயங்களுக்குத்தான் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது.
அப்பாவி ஊடகவியாளர்கள் அதுவும் தப்பித்தவறி சொல்லுகின்ற விடயங்களை பிழையாக சட்டத்தைப் பாவித்து  அவர்களுக்கு எதிராக அடிக்கடி கையாள்வதை நாங்கள் பார்க்கின்றோம்.
ஒரு சட்டமூலம் அங்கு உண்மையான தேவைக்காக இல்லாமல் ஊடகவியலாளருக்கு எதிராக பாவிக்கப்படுகின்ற ஒரு நிலைமையை இந்த  சட்டத்தில் நாங்கள் நிறைய பார்த்திருக்கின்றோம்.
எனவே இப்படியான நிலவரங்கள் சம்பந்தமாக கொஞ்சம் கூடுதலாக ஊடகங்கள்  கவனம் செலுத்த வேண்டும். சட்டமூலம் எந்த தேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோ அதற்கு மாற்றமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகும்.

கருத்து சுதந்திரம் என்பது முக்கியமானது. அதை பாதுகாக்க வேண்டும். இந்த கருத்து சுதந்திரத்திரத்திற்கு மாற்றமாக இது எதோ ஒரு தேவைக்காக கொண்டுவரப்பட்டது போல தோன்றுகின்றது. நாட்டிலே வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்களை பேசுபவர்களை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதை மாற்றமாக வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற இந்த விவகாரங்கள் முடிவுக்கு வரவேண்டும்.

நாம் வெறுப்பூட்டல் அல்லது இனக் கலவரம் சம்பந்தமாக பொலிஸில் முறையிட்டாலும் அதற்காக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற வேண்டியுள்ளது.

ஆகவேதான், இவ்வாறான விடயங்கள் சாதாரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்து குற்றப்பத்திரிகை ஊடாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்" என்றார்.