உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒன்லைனில் அனுமதி

உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளப்படும்  கட்டுமானத் திட்டங்களுக்கு ஒன்லைனில் அனுமதி

உள்ளூராட்சி சபைகளினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒன்லைன் ஊடாக அனுமதி வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.பி.கே.ரணவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே முன்வைத்த யோசனை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர்நாயகம் கோட்டே மாநகர சபை, கம்பஹா மற்றும் களுத்துறை பிரதேச சபைகளில் இந்தப் பரீட்சார்த்தத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில்
இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாயத் தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்நாலக்க கொடஹேவா ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பரீட்சார்த்தத் திட்டத்துக்கான சகல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் அறிந்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திட்டங்களை அங்கீகரிக்கும்போது ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் வெவ்வேறு
விதமான விண்ணப்பப்படிவங்களை வழங்குவதாகவும், சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பப்படிவங்களை அறிமுகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குக் கிடைக்கும் திட்டங்களுக்கு அனுமதி
வழங்கும்போது விண்ணப்பதாரர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகாத வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் போன்ற 17 நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கான நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கான முதலீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் பரீட்சார்த்த திட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் இவ்வருடத்துக்குள் 20 நடைபாதைகள், கிராமிய மற்றும் நகர வீடமைப்புத் திட்டங்களை அமைத்தல் உள்ளிட்ட இலக்குவைக்கப்பட்ட பணிகள் பெருமளவு முன்னெடுக்கப்படும் என்றும், இது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் பாரிய பகுதியாக அமையும் என்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுரத்த தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, முஜிபுர் ரஹ்மான், ஜகத் குமார, சுதத் மஞ்சுள, யாதாமினி குணவர்த்தன, நசீர் அஹமட், உபுல் மகேந்திர ராஜபக்ஷ , அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.